சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: வைகோ

சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: வைகோ


சென்னை: சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை - சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு 8 வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திடத் தமிழக அரசு முனைந்துள்ளது. இதற்காக ஐந்து மாவட்டங்களில் சுமார் 5,790 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இயற்கை எழில் கொஞ்சும் பசுஞ்சோலைகள், விளை நிலங்கள், கஞ்ச மலை, ஜருகு மலை, கல்ராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை ஆகிய 8 மலைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளும், லட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

இயற்கை வளங்களைச் சூறையாடி, பசுமையை அழித்து உருவாக்கப்படும் சாலைக்கு பசுமைச் சாலை என்று மோசடியான பெயரைச் சூட்டி இருப்பதுதான் முரண்பாடாக இருக்கிறது. இந்தத் திட்டத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் நிலை ஏற்படுகிறதே என்று இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் மக்கள் மீது தமிழக அரசு அடக்குமுறை தர்பாரை ஏவி விட்டுள்ளது.

பசுமைச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பசுமையை அழிக்கும் இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டும். வாழ்வாதாரத்துக்காகப் போராடும் மக்களை கைது செய்யும் கொடுமையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com