மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: தோப்பூரின் முழு ஜாதகம் இங்கே!

மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: தோப்பூரின் முழு ஜாதகம் இங்கே!

சென்னை: மதுரை மாவட்டம் தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து இந்த அறிவிப்பினை இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, புதுக்கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டம் செஞ்சிபட்டி, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய 5 பகுதிகளையும் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், தோப்பூரை தேர்வு செய்துள்ளனர்.

இந்த தோப்பூர் என்ற பகுதி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, கோனா புதுப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. 

மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு வெறும் 2 கிலோ மீட்டர் தூரத்தில்  தோப்பூர் அமைந்துள்ளது.

எய்ம்ஸ் அமைவதை முன்னிட்டு, தோப்பூரில் தங்குதடையின்றி மின்சார இணைப்பு மற்றும் குடிநீர், நான்கு வழி சாலை வசதி மேற்கொள்ளப்பட உள்ளது.

தோப்பூரில் 194.07 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதியுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது.

இந்த நவீன மருத்துவமனையை அமைக்க ரூ.1500 கோடி அளவுக்கு செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தோப்பூர் பகுதிக்கு ரிங் ரோடு வழியாக சென்றால் 15 கி.மீ. தூரம்.

பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் தோப்பூர் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து தோப்பூர் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 மருத்துவர்கள் பணி ஏற்படுத்தப்படும்.

அதோடு, 100 மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏற்படுத்தப்படும்.

750 படுக்கை வசதி கொண்ட நவீன மருத்துவமனை தோப்பூரில் அமைவதால், மதுரையைச் சுற்றியுள்ள சுமார் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்.

தற்போது தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்றால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்ற நிலையை எய்ம்ஸ் மருத்துவமனை மாற்றும்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்படுத்தப்படும் முதுநிலை மருத்துவப் படிப்புகளால் மாணவர்கள் அதிகளவில் பயன் பெறுவார்கள்.

தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 200 ஏக்கர் பரப்பளவு தற்போது தயாராக இருப்பதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக இங்கே 60 ஏக்கர் பரப்பளவு இருப்பதால், மேற்கொண்டு விரிவாக்கம் செய்யவும் வசதி இருப்பதை ஆய்வுக் குழுவினர் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

தோப்பூர் செல்ல தற்போது திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்கள் மிக அருகருகே அமைந்துள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

தோப்பூர் பகுதியின் மொத்த மக்கள் தொகை சுமார் 3 ஆயிரத்து 200 பேர். இங்கு ஆயிரத்துக்கும் குறைவான வீடுகள் அமைந்துள்ளன.

இந்த தோப்பூர் பகுதி திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது. நாடாளுமன்ற அளவில் எடுத்துக் கொண்டால் விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்டது.

தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த டி. ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.

விரைவில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com