காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தாமதம் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் ஏற்படும் தாமதம், நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் தாமதம் கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் ஏற்படும் தாமதம், நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளின் நலன்களில் பாரபட்சம் காட்டும் செயலாக அமைந்திடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை எழுதிய கடித விவரம்:
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைப்பதைத் தள்ளி வைக்க வேண்டுமென மத்திய அரசிடம் கர்நாடக முதல்வர் கோரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்க வேண்டுமென அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட...காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை அளித்தது. இந்தத் தீர்ப்பினை கர்நாடகம் முழுமையாக ஏற்காமல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக, முடிக்கப்பட்ட ஒரு பிரச்னையை மீண்டும் எழுப்பிட கர்நாடகம் கோரிக்கை விடுக்கிறது. காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகம் எழுப்பிய அனைத்துப் பிரச்னைகளுக்கும் கடந்த பிப்ரவரி 16 மற்றும் மே 18 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியாக தீர்வு காணப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பானது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு அதற்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இணங்க கர்நாடக அரசு மறுப்பு: காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதைத் தள்ளி வைக்க வேண்டுமென கர்நாடகம் வலியுறுத்துவது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு இணங்க மறுப்பதையே காட்டுகிறது. மேலும் இது நீதிமன்றத் தீர்ப்புகளின் வழியாக முடிக்கப்பட்ட ஒரு பிரச்னையை மீண்டும் தொடங்கும் முயற்சியே ஆகும். இதனை அனுமதிக்கக் கூடாது.
கடந்த ஆறு ஆண்டுகளாக குறித்த காலத்துக்குள் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் தவறியதால், தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கட்டாயமாக்கப்பட்டு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் எனவும், இதனால் இந்த ஆண்டு விவசாயத்துக்கு கர்நாடகத்தின் பிலிகுண்டுலுவில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து அது முழுமையாகச் செயல்படுவதில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால் அது நீதிமன்றத் தீர்ப்பை மீறும் செயலாக மாறிடும். அத்துடன் அது தமிழக விவசாயிகளின் நலன்களில் பாரபட்சம் காட்டும் செயலாக அமைந்து விடும்.
உத்தரவிட வேண்டும்: எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதனுடைய கூட்டத்தை உடனடியாகக் கூட்டிட மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை நதி புனரமைப்புத் துறைக்கு உடனடியாக தாங்கள் உத்தரவிட வேண்டும். நதிநீர் தொடர்பான உத்தரவுகளின்படி, மாதாந்திர அல்லது பத்து நாள்களுக்கு ஒருமுறை தமிழகத்துக்குரிய நீரை வழங்கிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com