பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை அரவிந்த் சுப்ரமணியன் ராஜிநாமா செய்ய இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். குடும்ப பொறுப்புகள் காரணமாக,
பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்

நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை அரவிந்த் சுப்ரமணியன் ராஜிநாமா செய்ய இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். குடும்ப பொறுப்புகள் காரணமாக, இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன், அரவிந்த் சுப்ரமணியன் காணொலி முறையில் என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போது, குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருப்பதால், தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அமெரிக்கா செல்ல இருப்பதாகக் கூறினார். அவர் கூறிய காரணங்கள் தனிப்பட்டவை என்றாலும் மிகவும் முக்கியமாவை. எனவே, அவருடைய விருப்பத்தை ஏற்றுக் கொண்டுவிட்டேன்.
அரவிந்த் சுப்ரமணியனின் பதவிக் காலம், கடந்த ஆண்டோடு நிறைவடைந்து விட்டது. அப்போது, மேலும் சில காலம் பதவியில் நீடிக்குமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அப்போதே குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் முக்கியப் பங்காற்றியதற்காக, அரவிந்த் சுப்ரமணியனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அலுவலகத்தில் ஒரு நாளில் பல முறை எனது அறைக்கு வந்து அமைச்சரே' என்று என்னை அழைத்து, ஏதாவது ஒரு தகவலை தெரிவிப்பார். அவர் பதவி விலகினாலும், அவரது மனம் இங்கேதான் இருக்கும் என்று நம்புகிறேன். அவர் எங்கே இருந்தாலும், தொடர்ந்து ஆலோசனைகளையும், கருத்துகளையும் எனக்கு அனுப்பி வைப்பார் என்று அருண் ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரவிந்த் சுப்ரமணியன், தலைமைப் பொருளாதார ஆலோசகராக, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி பதவியேற்றார். அவரது 3 ஆண்டு பதவிக் காலம், கடந்த ஆண்டுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, அவரது பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.
ஓரிரு மாதங்களில் ராஜிநாமா: இதனிடையே, தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியை ஓரிரு மாதங்களில் ராஜிநாமா செய்ய இருப்பதாக, அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்தார். தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
நிதியமைச்சகத்தில் இருந்து பதவி விலகும் தேதியை இன்னமும் நான் முடிவு செய்யவில்லை. வரும் செப்டம்பரில் எனக்கு பேரக்குழந்தை பிறக்க இருக்கிறது. எனவே, ஓரிரு மாதங்களில் பதவி விலகுவேன். நிதியமைச்சகத்தில் பணியாற்றிய இனிமையான நினைவுகளுடன் திரும்பிச் செல்வேன். எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்காக பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.
காங்கிரஸ் விமர்சனம்: இதனிடையே, அரவிந்த் சுப்ரமணின் பதவி விலகுவதாக அறிவித்திருப்பதில் வியப்பேதும் இல்லை என்றும், பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளால், அதிருப்தியை அடைந்த பொருளாதார நிபுணர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து வருகின்றனர் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார். 
இதே காரணத்துக்காகத்தான், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியா ஆகியோரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com