இந்தியப் பொருளாதாரம் இரு மடங்கு வளர்ச்சி பெறும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை

இந்தியப் பொருளாதாரம் அடுத்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
இந்தியப் பொருளாதாரம் இரு மடங்கு வளர்ச்சி பெறும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை

இந்தியப் பொருளாதாரம் அடுத்த 7 ஆண்டுகளில் இரு மடங்காக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
சென்னையில், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் பேசியது:
நாட்டின் மொத்த உற்பத்தி 8 சதவீதத்தை நெருங்கவுள்ளது. ஆனால் தொழில் திறனை 65 சதவீதமே பயன்படுத்துகிறோம். இதை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் மூலம் நாம் தொழில்திறனை 95 சதவீதம் பயன்படுத்த வாய்ப்பு கிட்டும்.
தென்மேற்குப் பருவமழை நன்றாக இருப்பதால், வேளாண் பொருள்கள் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் கிராமப்புற மேம்பாடு அதிகரிக்கும். 
இந்தியப் பொருளாதாரம் ரூ. 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் இருமடங்கு வளர்ச்சியைப் பெறும். சீனா பொருளாதார வளர்ச்சியை அடைய 12 ஆண்டுகள் எடுத்து கொண்ட நிலையில், நாம் இந்த வளர்ச்சியை எட்ட 7ஆண்டுகளே தேவைப்படுகிறது.
ஏற்றுமதி இயக்கம்: ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடைமுறையை கொண்டு வர வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் சேவைத் துறை, விற்பனைத் துறையை விட விரைவாக வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் 3-இல் இரண்டு பங்கு சேவைத் துறையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
12 முன்னோடித் துறைகளில் ரு.5 ஆயிரம் கோடி அளவுக்கு அரசு முதலீடு செய்ய உள்ளது. அத்துடன் நாட்டில் முதன்முறையாக சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வேளாண் ஏற்றுமதிக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 10 ஏற்றுமதி இயக்கங்களையும் தொடங்க விரும்புகிறது.
உலகம் முழுவதும் முக்கிய சர்வதேச வர்த்தக மையங்களில் ஏற்றுமதி மேம்பாட்டு அலுவலகங்களைத் திறக்க இந்தியா விரும்புகிறது. ஏற்றுமதியில் தடைகளைத் தவிர்க்க உலக வர்த்தக அமைப்புக்கு இணையாக ஏற்றுமதிக்கு ஊக்குவிப்புகள் இருக்கும். முன்னுரிமைக் கடன் துறையின் கீழ் ஏற்றுமதி துறையைக் கொண்டு வர வேண்டும் என்று வங்கியாளர்கள் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் சுரேஷ் பிரபு.
நிகழ்ச்சியில், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜிஎஸ்டி மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் சி.பி.ராவ், சென்னை சுங்கத்துறை ஆணையர்கள் பிரகாஷ் குமார் பெஹேரா, பத்மஸ்ரீ, மண்டல வெளிநாட்டு வர்த்தகத்துக்கான தலைமை இயக்குநர் டி.கே.சேகர், இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தென் மண்டல தலைவர் சக்திவேல், முன்னாள் தலைவர் ரபீக்அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்றார் அமைச்சர் சுரேஷ்பிரபு.
நூல் வெளியீடு: சுந்தரம் பருவநிலை கல்வி நிறுவன நிறுவனர் மிருதுளா ரமேஷின்  பருவநிலை தீர்வுகள்' என்ற நூலை வெளியிட்டு வியாழக்கிழமை அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியது:
பருவநிலை மாற்ற பாதிப்பின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு பெரும்பான்மை மக்களிடையே இல்லை. உலக சராசரி வெப்பநிலை 4 டிகிரியைத் தொடும்போது, பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இந்தியாவில் கோதுமையை விளைவிக்க முடியாத நிலை ஏற்படும்.
ஏற்கெனவே, அண்டார்டிகா பனிப் பிரதேசம் உருகத் தொடங்கியதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. கடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவது பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கும். இந்தியாவில் பல மாநிலங்கள் நிலத்தடி நீரையே குடிநீருக்கு நம்பியுள்ளன. 4 சதவீதம் மட்டுமே தூய நீர் இங்கு உள்ளது. வெப்பநிலை உயர்வதால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும்.
பருவ நிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளும்போதுதான் பலனளிக்கும் என்றார் அமைச்சர் சுரேஷ் பிரபு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com