உடலுறுப்புகளைத் தானம் பெற்றதில் முறைகேடு: தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடலுறுப்புகளைப் தானம் பெற்று நோயாளிகளுக்குப் பொருத்துவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடலுறுப்புகளைப் தானம் பெற்று நோயாளிகளுக்குப் பொருத்துவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானம் பெறும் இதயம் மற்றும் நுரையீரலை இந்தியர்களைக் காட்டிலும் வெளிநாட்டினருக்கு அதிக அளவில் பொருத்துவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க ஊரக மருத்துவப் பணிகள் இயக்குநர் தலைமையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத் துறை நியமித்தது.
மருத்துவமனையில் ஆய்வு: இக்குழுவினர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு நடத்தியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: வெளிநாட்டினருக்கு அதிக அளவில் தானம் பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலைப் பொருத்தியுள்ளது குறித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினோம். எனினும் இது ஆரம்ப கட்ட ஆய்வுதான். 
தீவிர ஆய்வுகளுக்குப் பின்னர்தான் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பான விவரங்கள் தெரிய வரும் என்று தெரிவித்தனர்.
சேலத்திலும்: விபத்தில் மூளைச்சாவு அடைந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கேரள இளைஞரிடம் சட்டவிரோதமாக உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். இப்புகார் குறித்தும் சுகாதாரத் துறை, காவல்துறையினர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சேலம் தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகளை முறைகேடாக தானம் பெற்றது தொடர்பான புகார் குறித்து விசாரிப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com