மழைநீர் சேமிப்புத் திட்டம் தீவிரப்படுத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் வகையில், மழைநீர் சேமிப்புத் திட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
மழைநீர் சேமிப்புத் திட்டம் தீவிரப்படுத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் வகையில், மழைநீர் சேமிப்புத் திட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டச் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்காக திண்டுக்கல் தவிர்த்து, 11 மாநகராட்சிகளில் ரூ.11 ஆயிரத்து 359 கோடி மதிப்பீட்டில் 250 திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதில் 13 திட்டங்கள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. 33 திட்டங்களுக்கு ரூ.846 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 33 திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 33 திட்டங்களுக்கு ரூ.15 கோடியில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது. 138 திட்டங்களுக்கு ரூ.8,093 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும் ஜூலை 31 -க்குள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு நகரத்துக்கும் மத்திய அரசு ரூ.500 கோடியும், தமிழக அரசு ரூ.500 கோடியும் நிதியுதவி வழங்குகின்றன. ஒரு பணி முடிவடைந்த பிறகே அதற்கான நிதியை மத்திய அரசு வழங்குகிறது. 
இந்த நிதியை முழுவதுமாக பயன்படுத்தி மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பொலிவுறு நகரங்கள் சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்படும். அம்ருத்' (நகர்ப்புற உருமாற்றம்), ஸ்மார்ட் சிட்டி' ஆகிய திட்டங்களை நிறைவேற்ற 2020 -ஆம் ஆண்டு வரை அவகாசம் உள்ளது. அதற்குள் பணிகள் விரைந்து முடிக்கப்படும். 
சென்னையில் நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் வகையில் மழைநீர் சேமிப்புத் திட்டம் தீவிரப்படுத்தப்படவுள்ளது என்றார் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com