கிருங்கை சேதுபதிக்கு பாலசாகித்ய' விருது, சுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார்' 

சுனில் கிருஷ்ணன் எழுதிய அம்புப் படுக்கை' எனும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருங்கை சேதுபதிக்கு பாலசாகித்ய' விருது, சுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார்' 

சுனில் கிருஷ்ணன் எழுதிய அம்புப் படுக்கை' எனும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருங்கை சேதுபதியின் சிறகு முளைத்த யானை' கவிதைத் தொகுப்புக்கு பால சாகித்ய' விருது கிடைத்துள்ளது.
சாகித்ய அகாதெமியின் செயற்குழுக் கூட்டம், அதன் தலைவர் சந்திரசேகர் கம்பாரின் தலைமையில் குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் முடிவில் 2018-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய, யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டன. 
சுனில் கிருஷ்ணன்: யுவ புரஸ்கார்' விருது பெற உள்ள சுனில் கிருஷ்ணன் காரைக்குடியைச் சேர்ந்தவர். 1986-இல் பிறந்த இவர், 2012-ஆம் ஆண்டு முதல் காந்தி இன்று' என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். இது காந்தி, காந்தியம் பற்றிய தளமாகும். இவரது முதல் நூல் காந்தி - எல்லைகளுக்கு அப்பால்' ஆகும். நரோபா எனும் புனைப் பெயரில் பதாகை, சொல்வனம், கபாடபுரம் ஆகிய இணைய இதழ்களில் கதைகள் வெளிவந்துள்ளன. இதுவரை நான்கு நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு எழுத்து- கணையாழி' அசோக மித்திரன் நினைவு குறுநாவல் போட்டியில் பேசும் பூனை' என்ற கதைக்கு பரிசு பெற்றுள்ளார். 
கிருங்கை சேதுபதி: பால சாகித்ய' விருது பெற உள்ள கிருங் கை சொ.சேதுபதி, சிவகங்கை மாவட்டம் கிருங்காக்கோட்டையைச் சேர்ந்தவர். 1970-இல் பிறந்த இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே சிறுவர் இலக்கியப் படைப்பாக்கத் துறையில் ஈடுபட்டு வருகிறார். 16-ஆவது வயதில் பூந்தளிர் இதழில் வாண்டுமாமா மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு எழுதத் தொடங்கிய சேதுபதி தொடர்ந்து கோகுலம், ரத்னபாலா, அமுதசுரபி, தினமணி சிறுவர்மணி உள்ளிட்ட இதழ்களில் அவ்வப்போது எழுதி வருகிறார். 
தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்ட வல்லுநர் குழுவில் ஒருவராக இருந்து உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கியிருக்கிறார். 
பால சாகித்ய விருது அறிவிக்கப்படும் ஆண்டுக்கு முன்னர் ஐந்து ஆண்டுகளுக்குள், குறிப்பிட்ட எழுத்தாளர் முதல் புத்தகத்தை வெளியிட்டிருக்க வேண்டும் அல்லது அவரின் படைப்பாக்கக் காலத்தின் தொடக்க பத்தாண்டுகளில், குழந்தை இலக்கியத்துக்காக அவர் ஆற்றிய பணிக்காக வழங்கப்படும்.
இந்த விருது 23 மொழிகளில் வழங்கப்படுகிறது. டோக்ரி மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும். 
வரும் நவம்பர் 14-ம் தேதி நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படும். நடப்பு ஆண்டு விருதுத் தேர்வுக் குழுவில், கவிஞர் மகுடேசுவரன், பேராசிரியர் மகாலிங்கம், பேராசிரியர் ஆர். கோதண்டராமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கவிதைத் தொகுப்புகளுக்கே... சாகித்ய அகாதெமியின் வருடாந்திர யுவ புரஸ்கார் விருது 22 மொழிகளுக்கு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கவிதைத் தொகுப்புகளே அதிக விருதுகளைப் பிடித்துள்ளன. 10 கவிதைத் தொகுப்புகள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள் மற்றும் ஒரு நாடகத்துக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 
போடோ மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும். டோக்ரி மொழிக்கான விருது இந்த ஆண்டு இல்லை என்று சாகித்ய அகாதெமி தெரிவித்துள்ளது. 
ஜனவரி முதல் தேதியன்று 35 வயதும், அதற்குக் குறைவான வயதும் கொண்டவர்கள் எழுதிய புத்தகங்களுக்காக இவ்விருது அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு யுவபுரஸ்கார் தமிழ் மொழி விருதுத் தேர்வுக் குழுவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பேராசிரியர் இராம.குருநாதன், கவிஞர் ரவிசுப்ரமணியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com