கிழக்கு கடற்கரை சாலையில் விதிமீறல் கட்டடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவு

கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி

கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் உத்தண்டி வரையிலான பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல்ஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர்: ஏ.ரங்கநாதன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் உத்தண்டி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் சொகுசு பங்களாக்களைக் கட்ட அனுமதி அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது உத்தண்டி, சோழிங்கநல்லூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் நடிகர் கமல், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்குப் புறம்பாக சொகுசு பங்களாக்களைக் கட்டியுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விதிமீறல் பங்களாக்களைக் கட்டிய உரிமையாளர்களின் பட்டியலைத் தாக்கல் செய்வதுடன், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
100 -க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ்: இந்த வழக்கில், சென்னை மாநகராட்சியின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீலாங்கரை முதல் உத்தண்டி வரை விதிகளை மீறி கட்டடங்கள் கட்டிய 100-க்கும் மேற்பட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆணையர் டி.மோகன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் , கிழக்கு கடற்கரை சாலையில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை சென்னை மாநகராட்சியும், சிஎம்டிஏவும் கண்டு கொள்ளாததால்தான் அந்தப் பகுதியில் சட்டவிரோத பங்களாக்கள், பண்ணை வீடுகள், ஓய்வு விடுதிகள் எனப் பல விதிமீறல் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நீலாங்கரை முதல் உத்தண்டி வரை: வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முதல்கட்டமாக நீலாங்கரை முதல் உத்தண்டி வரை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சியும், சிஎம்டிஏ-வும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
மேலும் தனி நபர்களின் நிறுவனங்கள் மற்றும் பங்களாக்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அகற்றல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதிக்குள் கட்டப்பட்டுள்ள விதிமீறல் கட்டடங்களை இடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் ஜூலை 27 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com