குட்கா ஊழல்: சிபிஐ விசாரணை தொடங்கியது

குட்கா ஊழல் தொடர்பாக, தில்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினர்.
குட்கா ஊழல்: சிபிஐ விசாரணை தொடங்கியது

குட்கா ஊழல் தொடர்பாக, தில்லி சிபிஐ அதிகாரிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை விசாரணையை தொடங்கினர்.
தமிழக அரசு கடந்த 2013 -ஆம் ஆண்டு குட்கா விற்பனைக்கு தடை விதித்தது. இருப்பினும், மாநிலத்தில் பெட்டிக் கடைகளில்கூட குட்கா, போதைப் பாக்குகள் விற்கப்பட்டன. தமிழக சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக் கொண்டு குட்கா, போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதி வழங்குவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
கடந்த 2017 ஜூலை 8 -இல் வருமான வரித் துறையினர், சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள குட்கா கிடங்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
டைரி சிக்கியது: இச்சோதனையில், குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ஒரு டைரி சிக்கியது. மேலும் இவர்கள் 3 பேரும் அரசுக்கு ரூ.250 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. 
அந்த டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்றைய காலக்கட்டத்தில் சென்னை காவல் துறை ஆணையராக இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை காவல் துறை ஆணையராக இருந்து ஓய்வுபெற்றுள்ள டிஜிபி எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள், கலால் வரித்துறை அதிகாரிகள், மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த ஊழலில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 2016 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 -ஆம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர், காவல் துறை டிஜிபி ஆகியோருக்கு வருமான வரித் துறை கடிதம் எழுதியது. 
இதற்கிடையே, 2017, நவம்பர் மாதம் போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலா அறையில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, அங்கிருந்து குட்கா ஊழல் குறித்து சில ரகசியக் கடிதங்களை கைப்பற்றினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு: இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் 26 -ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, தில்லி சிபிஐ அதிகாரிகள், ஏப்ரல் 30 -ஆம் தேதி வழக்கை பதிவு செய்தனர்.
இதற்கிடையே, இந்த ஊழலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையினர் கடந்த 9 -ஆம் தேதி தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனர்.
விசாரணை தொடங்கியது: இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கின் விசாரணையை தொடங்குவதற்காக, தில்லி சிபிஐ அதிகாரிகள், வியாழக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னையில் முகாமிட்டிருந்த அவர்கள், நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவு மற்றும் பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு, குட்கா ஊழல் நடைபெற்ற காலக்கட்டத்தில் அதிகாரிகளாக இருந்தவர்களின் பெயர் பட்டியலை அவர்கள் பெற்றனர். பின்னர், அந்த ஊழல் தொடர்பாக உணவு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் சில தகவல்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com