சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷூக்கு ஜாமீன் வழங்கி ஓமலூர் நீதிமன்றம் உத்தரவு: மன்சூர் அலிகான் மனு தள்ளுபடி

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷூக்கு ஓமலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷூக்கு ஓமலூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நடிகர் மன்சூர் அலிகான் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சேலம் மாவட்டம், ஓமலூர் காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம் சுமார் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதேபோன்று சேலத்தில் இருந்து சென்னை வரையில் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கப்படுகிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக சேலமே குரல் கொடு இயக்கத் தலைவர் பியூஷ் மானுஷ் போராட்டங்கள் நடத்தி வந்தார். மேலும், பல்வேறு தலைவர்களையும் அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தினார். இந்தநிலையில், கடந்த மே மாதம் 3-ஆம் தேதி சேலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான் சேலம் விமான நிலைய விரிவாக்க நிலங்களைப் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அவர், விவசாய நிலங்களை எடுப்பது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாராம். இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி சேலமே குரல் கொடு இயக்கத் தலைவர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீஸார், அன்று காலையே சென்னைக்குச் சென்று நடிகர் மன்சூர் அலிகானைக் கைது செய்தனர். தொடர்ந்து 18-ஆம் தேதி இரவு சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷைக் கைது செய்தனர். 
இந்தநிலையில், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் தங்களை ஜாமீனில் விடக் கோரி ஓமலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. இந்த மனுக்களை விசாரித்த, ஓமலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரமேஷ், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இவர் ரூ.10 ஆயிரம் காப்புத் தொகை அளித்துவிட்டு, தினமும் காலையும் மாலையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்றும் நடுவர் ரமேஷ் உத்தரவிட்டார்.
மேலும், நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நடுவர் உத்தரவிட்டார். இந்தநிலையில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்படும் என்று வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com