சிவகங்கை: இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழா

சிவகங்கை அருகே உள்ள இந்தோ-தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் கடந்த (2017-2018) ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 242 வீரர்களை

சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள இந்தோ-தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் கடந்த (2017-2018) ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 242 வீரர்களை நாட்டின் எல்லைப் பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கும் விழா, வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்தோ - தீபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டிஐஜி ஆஸ்டின் ஈப்பன் தலைமை வகித்து, வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

மேலும், பயிற்சியில் சிறந்து விளங்கிய அஜய்குமார், அங்குஷ்சௌத்ரி, யாசின், சகில்சிங், மன்ஜீத் தாக்கூர், அமித் ஆகிய வீரர்களை பாராட்டி கோப்பைகளை வழங்கினார். 

விழாவில், நாட்டின் ஒற்றுமையை வெளிபடுத்தும் வகையில் வீரர்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய தேசியக் கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களின் சாகச நிகழ்ச்சியாக கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்திற்குள் சாகசம், துப்பாக்கிகளை கையாளும் விதம், நடனம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தற்போது பயிற்சி நிறைவு செய்துள்ள 242 வீரர்களும் தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட்,  குஜராத், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, புதுதில்லி, ஹரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 11 மாநில எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com