சிவகங்கையில் திருட்டு வழக்கு விசாரணையில் ரூ.2.70 கோடி ஹவாலா பணம் சிக்கியது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டில் லாக்கர் வைத்து பதுக்கிவைத்திருந்த வெளிநாட்டு கரன்சி உள்பட ஹவாலா பணம் (கணக்கில் வராத) ரூ. 2.70 கோடியை வடக்குக்காவல்நிலைய போலீஸார் சனிக்கிழமை பறிமுதல்செய்தனர். 
சிவகங்கையில் திருட்டு வழக்கு விசாரணையில் ரூ.2.70 கோடி ஹவாலா பணம் சிக்கியது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டில் லாக்கர் வைத்து பதுக்கிவைத்திருந்த வெளிநாட்டு கரன்சி உள்பட ஹவாலா பணம் (கணக்கில் வராத) ரூ. 2.70 கோடியை வடக்குக்காவல்நிலைய போலீஸார் சனிக்கிழமை பறிமுதல்செய்தனர். 

இதில் திட்டமிட்டு ரூ. 44 லட்சத்தை திருடியதாக அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட பணம் சிக்கியது. 

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு 3 பேரை போலீஸார் கைது செய்தனர். காரைக்குடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் வெளிநாடுகளில் பணிபுரிவோர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் பணத்தை ஒப்படைக்கும் பணப்பரிவர்த்தனை செய்து வருகிறாராம். 

இதற்காகவே வெளிநாட்டுகரன்சி மற்றும் பணத்தை காரைக்குடி சுப்பிரமணியபுரம் 1-வது வீதியில் உள்ள தனது உறவினரான (சித்தி) சிட்டாள் ஆச்சி என்பவரது வீட்டில் லாக்கரில் பணத்தை வைத்திருப்பது வழக்கம். இந்த விசயம் யாவும் சுப்பிரமணியனின் கார் ஓட்டுநர் நாராயணனுக்குத் தெரியுமாம். 

இந்த நிலையில் நாராயணன் தனது சகலை உறவினர் காரியாபட்டியைச்சேர்ந்த செல்வராஜை (44) காரைக்குடிக்கு வரவழைத்தாராம். அவரும், கார் ஓட்டுநரான நாராயணனும் பணம் வைக்கப்பட்டிருந்த சிட்டாள் ஆச்சி வீட்டிற்குச்சென்று சுப்பிரமணியன் எடுத்துவரச் சொன்னதாகக் கூறி லாக்கரில் உள்ள டிரேயை போன்று போலியாக ஒன்றைவைத்துவிட்டு வேறு ஒரு டிரேயை எடுத்துச்சென்று விட்டனராம். அவர் எடுத்துச்சென்ற டிரேயில் ரூ. 44 லட்சம் இருந்துள்ளது. 

இதனை செல்வராஜ் ராமநாதபுரத்தில் உள்ள தனது பள்ளித்தோழர் சேகர் (35) என்பவரிடம் கொடுத்துவிட்டு தனது ஊருக்குச் சென்றுவிட்டாராம். இந்நிலையில் சிட்டாள் ஆச்சி தனது உறவினரான சுப்பிரமணியனிடம் உனது கார் ஓட்டுநர் நாராயணன் மற்றும் இன்னொருவரும் வந்து நீ ஏதோ பெட்டியை எடுத்துவரச் சொன்னதாகக் கூறி ஒரு பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டனர் என்ற தகவலை தெரிவித்தாராம். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் உடனடியாக லாக்கர் உள்ள சிட்டாள் ஆச்சி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர்கள் லாக்கரில் வெறும் டிரேயை போலியாக வைத்துவிட்டு ரூ. 44 லட்சம் உள்ள டிரேயை பணத்துடன் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல்நிலையத்தில் சுப்பிரமணியன் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீஸார் விசார ணை மேற்கொண்ட போதுதான் லாக்கரில் பிரான்ஸ், சவுதி அரோபியா, மலேசியா ஆகிய வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட ஹவாலா பணம் ரூ. 2.70 கோடி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்தனர். காரைக்குடி டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் வடக்குக் காவல்நிலைய ஆய்வாளர் தேவகி, சார்பு ஆய்வாளர்கள் சரவணன், அரவிந்தன், மணிமொழி ஆகியோர் துரிதமாக செயல்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தைத் திருடிய காரைக்குடியைச் சேர்ந்த நாராயணன், காரியாபட்டியைச் சேர்ந்த செல்வராஜ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து ரூ.44 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் 1-வீதியில் உள்ள சிட்டாள் ஆச்சி என்பவரது வீட்டில் வைத்திருந்த வெளிநாட்டு கரன்சி உள்பட ஹவாலா பணம் ரூ.2 கோடியே 70 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். இந்தப்பணத்திற்கு உரியவர்கள் கணக்கை நீதிமன்றத்தில் அளித்து பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com