வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை:தரவரிசைப் பட்டியல் வெளியீடு: திண்டுக்கல் மாணவி முதலிடம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பட்டியலில் திண்டுக்கல் மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பட்டியலில் திண்டுக்கல் மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 48,676 மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 32,621 பேர் உரிய கட்டணம் செலுத்தி, போதிய விவரங்களைச் சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் 13,889 பேர் ஆண்கள், 18,732 பேர் பெண்கள். பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் துணைவேந்தர் கு.ராமசாமி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இதன்படி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.என்.ஆர்த்தி 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம், எம்.கந்தம்பாளையம் தனியார் பள்ளி மாணவி ஆவார்.
இரண்டாவது இடத்தை ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகார்த்திகா பழனிசாமியும், 3ஆவது இடத்தை கோவை வடவள்ளியைச் சேர்ந்த எம்.மேகனாவும் பிடித்துள்ளனர்.
அதேபோல், திருவள்ளூர் வி.நந்தினி, தருமபுரி ஜி.கெளசல்யா, ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த ஆர்.சிந்துஜா, புதுக்கோட்டை எம்.பவித்ரா, கன்னியாகுமரி எஸ்.சாகுல் இர்பான், எடப்பாடி ஜி.கோகிலா, தேனி எஸ்.மணிராஜ் ஆகியோர் முறையே முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனர்.
தரவரிசைப் பட்டியலில் 200 முதல் 197 மதிப்பெண்கள் வரை 100 பேரும், 197 முதல் 195.75 வரை 200 பேரும் , 195.75 முதல் 195 மதிப்பெண்கள் வரை 300 பேரும் பெற்றுள்ளனர். 
தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் 29,200 பேரும், தொழிற்கல்வி பாடப் பிரிவில் 1,380 பேரும், சிறப்பு ஒதுக்கீடுதாரர்கள் பிரிவில் 930 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை 7ஆம் தேதியும், தொழிற்கல்வி பாடப் பிரிவினருக்கு 16-ஆம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வேளாண் வணிகப் பிரிவினருக்கு ஜூலை 17, 18-ஆம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இவற்றில் விடுபட்டவர்களுக்கு இரண்டாவது கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 27-ஆம் தேதியுடன் கலந்தாய்வு நடைமுறைகள் முடிவுக்கு வருவதாகவும், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்றும் துணைவேந்தர் கு.ராமசாமி தெரிவித்துள்ளார்.
தரவரிசைப் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சியில், புல முதன்மையர்கள் (டீன்) வரதராஜ் (வேளாண் பொறியியல்), மகிமை ராஜா (வேளாண்மை) , ஜவஹர் (தோட்டக்கலை), விஜயகுமார் (மாணவர் நலன்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com