பசுமைச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம்: மறியலில் ஈடுபட்ட 435 பேர் கைது

சென்னை- சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பசுமைச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக ஆர்ப்பாட்டம்: மறியலில் ஈடுபட்ட 435 பேர் கைது

சென்னை- சேலம் எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 அப்போது, சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 435 - க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
 சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலம் அளவீடு செய்யும் பணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், எட்டு வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தார். சேலம் மத்திய மாவட்டச் செயலரும், வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தேர்தல் பணிக் குழு செயலர் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன், மத்திய மாவட்ட அவைத் தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், மாநகரச் செயலர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மற்றும் விவசாயிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 ஆர்ப்பாட்டத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியது:
 பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக 5 மாவட்டங்களில் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பசுமைச் சாலைத் திட்டம் அமைக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு துணை போகிறது. விவசாயிகள் நலன் காக்க திமுக எப்போதும் துணை நிற்கும். அதேபோல, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தையும், பசுமைச் சாலைத் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றார்.
 சாலை மறியல் -435 பேர் கைது: இதனிடையே நாமக்கல்லில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டியதாக கைது செய்யப்பட்ட திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 இதுபற்றி தகவலறிந்த திமுகவினர் ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக ரவுண்டானா பகுதியில் எம்.எல்.ஏ. ஆர்.ராஜேந்திரன் தலைமையிலும், ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையிலும் மறியல் நடந்தது.
 இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 435 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com