ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் திமுக போராட்டமும் தொடரும்

தமிழக ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் திமுக போராட்டமும் தொடரும் என கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் திமுக போராட்டமும் தொடரும்

தமிழக ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால் திமுக போராட்டமும் தொடரும் என கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 ஆளுநர் அலுவலக விளக்க அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் "விளக்கம்' என்ற பெயரில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் செய்தி ஒன்றை வெளியிட்டு, அரசியல் சட்டத்துக்கு முரணாக நேரடி அரசியல் செய்ய முயன்றுள்ளதற்கு திமுக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
 எதிர்ப்பு ஏன்? ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமையிலும், கடமையிலும், அதிகாரத்திலும் அரசியல் சட்டத்தின் வரையறைகளுக்கும் மரபுகளுக்கும் மாறாகத் தலையிட்டு, மாவட்ட அளவில் அரசு அதிகாரிகளைக் கூட்டி நடத்தும் ஆய்வுக்குத்தான் திமுக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இதன் அடையாளமாக, அனுமதிக்கப்பட்ட வழக்கத்தின் அடிப்படையில், கருப்புக் கொடியும் காட்டுகிறது.
 ஏற்றுக் கொள்ள முடியாது: "கூட்டாட்சித் தத்துவம்" என்பது அரசியல் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அருட்கொடை. அதில் குறுக்கிட்டு, இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கற்பனை செய்து, தனக்கென ஓர் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இரண்டாம் தரத்திற்குத் தள்ளிச் சிறுமைப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக நெறிகள் இழிவுபடுத்தப்படுவதை திமுக ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது.
 மிரட்டிப் பார்க்க முயற்சி: இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 குறித்து குறிப்பிட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பற்றியெல்லாம் ஆளுநர் சார்பில் குறிப்பிட்டு, திமுகவை மிரட்டிப் பார்க்க முயற்சி செய்திருக்கிறார்கள். அரசியல் சட்டத்தின் 163-ஆவது பிரிவையும், அந்தப் பிரிவின் கீழ் வெளிவந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் படித்துப் பார்த்தாலே திமுக எதிர்ப்பு எந்த அளவுக்கு நியாயமானது, சட்டத்துக்குட்பட்டது என்பது நன்கு தெரியும்.
 பொறுத்துக் கொள்ள முடியாது: திமுகவைப் பொருத்தவரை, ஆளுநர் பதவி தேவையற்ற ஒன்று என்ற நிலைப்பாடு உடையது எனினும், அரசியல் சட்டத்தில் ஆளுநர் பதவி இருக்கும் வரை அந்தப் பதவியின் மாண்புகளை மதித்து நடக்கும். அதே நேரத்தில் அந்தப் பதவியில் இருப்பவர்கள் அரசியல் சட்டத்தின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு மாறாகச் செயல்பட நினைக்கும் போது அதை திமுக பொறுத்துக் கொள்ளாது.
 இறுதியாக "ஆய்வு தொடரும்' என்று ஆளுநர் அறிவித்துள்ளார். அவ்வாறு ஆய்வு தொடரும் என்றால், திமுக-வின் போராட்டமும் தொடரும்.
 "போராட்டத்தை தீவிரப்படுத்தும்'
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 ஆளுநரின் ஆய்வை நியாயப்படுத்தியும், எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என எச்சரித்தும் ஆளுநர் மாளிகை சார்பில் விளக்க அறிக்கை வெளியிட்டிருப்பது போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதாகவே அமையும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு எவ்வளவு மோசமாக முடங்கிப் போயிருந்தாலும், அதன் மீது சட்ட ரீதியாக அல்லது ஜனநாயக ரீதியாக தீர்வு காணும் வரை ஆளுநர் நிர்வாக கட்டமைப்பில் நேரடியாகத் தலையிட எங்கே வழிவகை செய்யப்பட்டிருக்கிறது? எந்தவொரு விளக்கம் தேவைப்பட்டாலும் தலைமைச் செயலகத்தைத்தான் ஆளுநர் மாளிகை தொடர்பு கொள்ள வேண்டும்.
 இந்நிலையில், ஜனநாயக வழிமுறையில் போராடுபவர்களை மிரட்டுவது, எச்சரிப்பது போன்ற செயலில் ஆளுநர் மாளிகை ஈடுபடுவது அமைதியைச் சீர்குலைக்கும் ஜனநாயக விரோதச் செயலாகும். ஆளுநர் தனது தவறான செயல்பாட்டை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 பசுமை சாலைத் திட்டத்துக்கு எதிராக போராட்டம்: சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 4-ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com