பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளே முன்வந்து நிலம் ஒப்படைப்பு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலங்களை ஒப்படைக்கின்றனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளே முன்வந்து நிலம் ஒப்படைப்பு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலங்களை ஒப்படைக்கின்றனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
 சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த முதல்வருக்கு, காமலாபுரம் விமான நிலையத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, ஓமலூர் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
 காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தெளிவான தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்குத் தேவையான உறுப்பினர்களை 4 மாநிலங்களும் பரிந்துரைக்க வேண்டும்.
 இதன்படி தமிழகம், கேரளம், புதுச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தன. ஆனால், கர்நாடகம் மட்டும் பிரதிநிதிகளைப் பரிந்துரைக்கவில்லை. இதனால், தானாகவே கர்நாடகத்துக்கான பிரதிநிதிகளை மத்திய அரசு நியமித்திருக்கிறது.
 ஒவ்வொரு மாதமும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாள்களுக்கு ஒருமுறை நீரைக் கணக்கிட்டு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும். எனவே, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும்.
 விவசாயிகளே முன்வந்து நிலம் அளிப்பு: சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் சுமார் 56 கி.மீ. தொலைவுக்கும், சேலத்தில் 30 கி. மீ. தொலைவுக்கும் எல்லைக் கல்கள் நடப்பட்டுவிட்டன. இத்திட்டத்துக்காக, 100 }க்கு 4 அல்லது 5 விவசாயிகள் மட்டுமே நிலத்தை தர மறுக்கிறார்கள். பெரும்பாலானோர் நிலங்களை தாமாகவே முன்வந்து வழங்கியிருக்கிறார்கள்.
 கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, பெங்களூரிலிருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, உளுந்தூர்பேட்டை சாலை ஆகியவை 2006 -இல் அமைக்கப்பட்டன. அப்போது, தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 1.07 கோடி. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 2.57 கோடி.
 அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்துக்கேற்ப சாலைகளை உருவாக்குவது அரசின் கடமையாகும். அதற்கு மத்திய அரசு முன்வந்து பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசும் உதவி செய்கிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களின் வாயிலாக எவ்வளவு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பது குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 திமுகவினர் கைது ஏன்?: பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றபோது யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்துக்கு புறம்பாக நடந்துகொள்வோர்தான் கைது செய்யப்படுகின்றனர்.
 நாமக்கல்லுக்கு ஆளுநர் வந்தபோது, ஒதுக்கப்பட்ட இடத்தில் கருப்புக் கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்தில் சட்டம் -ஒழுங்கை குலைக்கின்ற விதத்தில் நடந்த காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
 ஆக்கப்பூர்வமான முறையில் வளர்ச்சித் திட்டங்களை ஆளுநர் பார்வையிடுவதை யாரும் தடுக்க முடியாது. யாரும் வரக்கூடாது என்று ஜனநாயக நாட்டில் சொல்லமுடியாது. வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கு வருகை புரிவது தவறல்ல.
 விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாதது: சேலத்தில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி தொழிற்சாலை வரவிருக்கிறது. வேலைவாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் வேண்டுமென்றால் தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும்.
 சேலம் விமான நிலைய விரிவாக்கம் என்பது தவிர்க்க முடியாதது. இதற்காக ஏற்கெனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது. 1,200 பேருக்கு மேல் இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இதுவரை இல்லாத அளவு ஏழைகளுக்கு நில இழப்பீடு வழங்கப்படும்.
 கடந்த காலத்தில் திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் நில இழப்பீட்டுத் தொகை குறைவாகத்தான் கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு அப்படியல்ல.
 ஏற்கெனவே சேலம் மாவட்ட ஆட்சியர், மரங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது குறித்து அறிக்கை தந்திருக்கிறார். மேலும் வீடுகளுக்கும், ஓட்டு வீடுகளுக்கும், கடந்த காலங்களில் தேய்மானங்களைக் கணக்கிட்டுத்தான் இழப்பீடு வழங்கினார்கள். அதையெல்லாம் தவிர்த்து, தேவையான அளவுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு நடவடிக்கையை அரசு எடுக்கும். பசுமை வழிச்சாலைக்கு கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலங்கள் இழப்பவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான இடங்களை அளித்து பசுமை வீடுகளைஅரசு கட்டிக் கொடுக்கின்றது.
 சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கக் கூடாது: சேலம் இரும்பாலை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியார்மயம் கூடாதென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
 விமர்சிக்க உரிமையில்லை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நீதிமன்றம் என்பது பொதுவானது. எனவே, நீதிமன்றத்தை விமர்சிப்பதை அனைவரும் தவிர்க்கவேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.
 பேட்டியின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com