ராணுவ வீரர்களின் பயன்பாட்டுக்காக தென்னை நார் பிளைவுட்: தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் தகவல்

ராணுவ வீரர்கள் கடுமையான குளிர், வெயில் ஆகியவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தென்னை நார் மூலம் பிளைவுட் தயாரிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தேசிய
கோவை கொடிசியா வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பாதுகாப்புத் துறைக்கு உள்நாட்டிலேயே தளவாடங்களை தயாரிப்பது தொடர்பான கண்காட்சியில் இடம் பெற்றிருந்த விமான மாதிரியைப் பார்வையிடும் மாணவிகள்.
கோவை கொடிசியா வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பாதுகாப்புத் துறைக்கு உள்நாட்டிலேயே தளவாடங்களை தயாரிப்பது தொடர்பான கண்காட்சியில் இடம் பெற்றிருந்த விமான மாதிரியைப் பார்வையிடும் மாணவிகள்.

ராணுவ வீரர்கள் கடுமையான குளிர், வெயில் ஆகியவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், தென்னை நார் மூலம் பிளைவுட் தயாரிக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக தேசிய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பான பொருள்காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. கண்காட்சியைத் தொடங்கிவைத்து சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தேசப் பாதுகாப்பை பலப்படுத்தவும், அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும் ராணுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், இதில் இறக்குமதிக்கு மாற்றாக, நிரந்தர உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் பொறியியல் உற்பத்தியில் சிறந்து விளங்கி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் மையம் அமைய உள்ளது.
இதன்மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை இங்குள்ள தொழில் முனைவோர் பெற முடியும். மேலும் இந்த வாய்ப்பை தொழில் முனைவோர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ராணுவ வீரர்கள் கடுமையான குளிர், அதிகமான வெப்பம் நிலவும் பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தங்குவதற்கு தாற்காலிகக் கூடாரங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு தென்னை நார் மூலம் பிளைவுட் தயாரித்து வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஆய்வு விரைவில் முடிவடையும்.
இந்த பிளைவுட்டுகளைப் பயன்படுத்தி 6 மணி நேரத்தில் கூடாரங்களைத் தயாரிக்கவும், 4 மணி நேரத்தில் அவற்றை அகற்றவும் முடியும். இவை, கடும் குளிர், அதிக வெப்பமான காலநிலைகளில் இருந்து வீரர்களைப் பாதுகாக்கும் வகையில் இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், கொடிசியா தலைவர் வி.சுந்தரம் பேசும்போது, கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்க ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், கோவை மண்டலத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர்களால் ராணுவத்துக்காக எந்த வகையான பொருள்களைத் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டவும், அதேபோல் தங்களுக்கு எந்த வகையான பொருள்கள் தேவை என்பதை ராணுவம் சார்ந்த துறையினர் தொழில் முனைவோருக்கு விளக்கம் அளிக்கும் விதத்திலும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில், 42 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும், கடற்படை, விமானப்படை, ஹெச்.ஏ.எல்., பாரத் எர்த் மூவர்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோவா ஷிப் யார்டு, டி.ஆர்.டி.ஓ. உள்ளிட்ட 28 நிறுவனங்களும் பங்கேற்று தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தக் கண்காட்சியை முதல் நாளிலேயே 1,800 தொழில் முனைவோர் பார்வையிட்டுள்ளனர் என்றார்.
கண்காட்சியில் இடம் பெற்றிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், விமானங்களின் மாதிரிகளை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கண்டு ரசித்தனர். இந்த விழாவில் இந்திய தொழில், வர்த்தக சபையின் கோவை தலைவர் வனிதா மோகன், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சுப்ரதா சஹா, ராணுவ அதிகாரிகள், கொடிசியா நிர்வாகிகள், தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.
கண்காட்சியின் இரண்டாவது, இறுதி நாளான செவ்வாய்க்கிழமை நேரடி கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. இதில் ராணுவம், பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். உள்ளூர் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்று தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com