ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனுவை விசாரணை ஆணையம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனு தள்ளுபடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனுவை விசாரணை ஆணையம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து தெரிந்த தகவல்களைத் தெரிவிக்குமாறு சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி இருந்தது. 
அதைத் தொடர்ந்து, தனக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள் குறித்த ஆவணங்களை அளிக்குமாறு சசிகலா கோரினார். 
இதையடுத்து, 2, 956 பக்கங்கள் அடங்கிய 450 ஆவணங்களை விசாரணை ஆணையம் அண்மையில் வழங்கியது.
இந்நிலையில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கோரிய சசிகலாவின் மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
அனைத்து ஆவணங்களையும் ஆணையத்தில் இருந்து பெற்றுக் கொண்ட பின்னர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி விசாரணை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள வாசகங்களை நீக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
ஜெயலலிதாவுடன் சசிகலா மட்டுமே வசித்து வந்துள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வரை போயஸ் கார்டனில் என்ன நடந்தது, மருத்துவமனையில் என்ன நடந்தது என்ற அனைத்து விவரங்களையும் சசிகலா மட்டுமே அறிவார்.
சசிகலாவுக்கு எதிரான கருத்துகளை நீக்க முடியாது: அதன் அடிப்படையில், சசிகலாவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று சசிகலா கேட்டுக் கொண்டார். இதையடுத்து, அவருக்கு அந்த ஆவணங்கள் வழங்கப்பட்டன. 
ஜெயலலிதா மரணத்தில் முடிவு எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் சசிகலா குறித்த சில விஷயங்களை இந்த ஆணையம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் சுட்டிக்காட்டி இருந்தது. அந்த உத்தரவில் கூறி உள்ள விஷயங்களை சசிகலா ஒத்துக்கொண்ட பின்னர், அதை நீக்க முடியாது.
காலதாமதப்படுத்தும் சசிகலா: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நடந்தது என்ன என்பது குறித்து தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்யும்படி மட்டுமே இந்த ஆணையம் சசிகலாவுக்கு அழைப்பாணை அனுப்பியது. 
ஆனால், தனக்கு எதிராகப் புகார் அளித்தவர்களுக்குப் பதில் அளிப்பதற்காக அதுதொடர்பான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே சசிகலா ஒவ்வொரு மனுவாக தாக்கல் செய்து வருகிறார். அழைப்பாணை அனுப்பிய நாளான 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து தற்போது வரை சசிகலா தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. மாறாக கால அவகாசம் கேட்டு 5-ஆவது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார். 
இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த சசிகலா விரும்பவில்லை என்ற முடிவுக்கு வரத் தோன்றுகிறது. 
மனு தள்ளுபடி: இந்த ஆணையத்துக்கு 2 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு நேரில் சென்று சசிகலாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வது அல்லது சசிகலா தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என்று கருதி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான். இதைக் கருத்தில் கொண்டு சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் கண்ணன் ஆஜர்: இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான ஜெயலலிதாவின் ஓட்டுநர் கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஆம்புலென்ஸுக்கு பின்னால் சென்றேன், கடந்த 1991-இல் இருந்து ஜெயலலிதாவுக்கு ஓட்டுநராக இருந்துள்ளேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com