ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையத்துக்கு கோப்பை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

காவல் நிலையங்களில் மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பை அளிக்கப்படும்
ஆண்டுதோறும் சிறந்த காவல் நிலையத்துக்கு கோப்பை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

காவல் நிலையங்களில் மக்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பை அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு புதன்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவடைந்தது. முதல் நாளில் மாவட்ட ஆட்சியர்கள்-காவல் துறை அதிகாரிகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதன்பின், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மூன்றாம் நாளான புதன்கிழமையன்று காலை காவல் துறை அதிகாரிகளுடன் மட்டும் ஆலோசிக்கப்பட்டது. மாலையில் மாநாட்டின் நிறைவுரை ஆற்றினார் முதல்வர் பழனிசாமி. இந்த உரையில் 32 மாவட்டங்களுக்கும் தேவையான புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
முதலமைச்சரின் கோப்பை: சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் குழந்தைகளுக்காக புதுப்பேட்டை, புனித தோமையார் மலை ஆகிய இடங்களில் விளையாட்டு பள்ளிகளுடன் கூடிய குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும். அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு, அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடம் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அருகே புதிய கட்டடம் கட்டித் தரப்படும்.
சென்னை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைமையகத்தில் ஒரு நவீன கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலமாக சூரிய மின்சக்தித் திட்டம் அமைக்கப்படும். மனித உயிர்களை விபத்தில் இருந்து காக்கும் சேவையில் அதிக ஈடுபாட்டோடு செயல்படும் முதல் மூன்று மாவட்டங்கள் மற்றும் ஒரு மாநகரத்துக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் விபத்து குறைப்புக்கான சிறந்த மாவட்டம் மற்றும் சிறந்த நகரத்துக்கான விருது வழங்கப்படும்.
காவல் நிலையங்களில் மேம்பட்ட சேவையை மக்களுக்கு வழங்குவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் மூன்று காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படும். அவற்றுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பை அளிக்கப்படும்.
பணி சிறக்க வாழ்த்துகள்: மாவட்டங்களில் இதுவரையில் காவல் துறையினர் செய்த சிறப்பான பணிகளைப் பாராட்டும் வேளையில், வரும் ஆண்டில் பணி மேலும் சிறக்க வேண்டுமென முதல்வர் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com