காவலர் எழுத்துத் தேர்வில் முறைகேட்டை தடுக்க விடைத் தாளில் 'பார்கோடு'

தமிழகத்தில் மார்ச் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள காவலர் எழுத்துத் தேர்வில் முறைகேட்டை தடுப்பதற்காக விடைத் தாளில், இம்முறை ' பார்கோடு' பயன்படுத்தப்படுகிறது.
காவலர் எழுத்துத் தேர்வில் முறைகேட்டை தடுக்க விடைத் தாளில் 'பார்கோடு'

தமிழகத்தில் மார்ச் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள காவலர் எழுத்துத் தேர்வில் முறைகேட்டை தடுப்பதற்காக விடைத் தாளில், இம்முறை ' பார்கோடு' பயன்படுத்தப்படுகிறது.

தமிழக காவல் துறையில் ஆயுதப் படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கும், சிறைத் துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் பணியிடங்களுக்கும், 46 பின்னடைவு பணியிடங்களுக்கும் ஆக மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்போவதாக கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்தது.

இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதும் இருந்து 3.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்10 சதவீதம் பேர் பெண்கள். இத்தேர்வில் 19 திருநங்கைகளும் பங்கேற்கின்றனர். இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத்
தேர்வு மார்ச் 11-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 232 தேர்வு மையங்களில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பார்கோடு அறிமுகம்: இத்தேர்வில் முறைகேட்டை தடுப்பதற்காக சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக தேர்வுக் கூட மையத்தில் யாரும் முறைகேட்டில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, தொழில்நுட்ப ரீதியாகவும் சில நடவடிக்கைகளை சீருடை பணியாளர் தேர்வு குழுமம் எடுத்துள்ளது.

முக்கியமாக, இந்தத் தேர்வில் பதிவு எண், வரிசை எண் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பார்கோடு இம்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

பார்கோடு ஏன்?: சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் பெரும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால், காவலர் தேர்வில் இத்தகைய முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்கு பார்கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உயர் அதிகாரி தெரிவித்தார். 

இரு பார்கோடுகள்: இந்தத் தேர்வுக்காக சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம், பள்ளி கல்வித் துறையின் ஆசிரியர் குழுவினரால் தயாரிக்கப்பட்ட வினாத் தாளையும், விடைத்தாளையும் 'அவுட்சோர்சிங்' மூலம் அச்சிட்டுள்ளது. விடைத் தாள்கள் இரு பகுதிகளாக இருக்கின்றன. விடைத் தாளின் மேல் பகுதியில் இரு இடங்களில் பதிவு எண்ணுக்கு பதில் இரு பார்கோடுகளும், இரு இடங்களில் வரிசை எண்ணுக்குப் பதிலாக இரு பார்கோடுகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

முறைகேடுக்கு வாய்ப்பில்லை: மேலும், அதில் தேர்வரின் புகைப்படம், அவரது பதிவு எண், வரிசை எண், தேர்வு மையத்தின் எண், தேர்வு விதிமுறைகள், விடைத் தாளில் பதில் அளிக்கும் முறை ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. எந்த இடத்திலும் மாணவர்கள் பேனாவில் எழுத தேவை இல்லை. மாணவர் கையெழுத்து மட்டும் போடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை தேர்வு அறை கண்காணிப்பாளர், தேர்வு முடிந்ததும் விடைத் தாளில் இருந்து பிரித்து எடுத்துவிடுவார்.

கீழே உள்ள விடை எழுதும் பகுதியில் பதிவு எண்ணுக்குரிய பார்கோடும், வரிசை எண்ணுக்குரிய பார்கோடும் மட்டும் உள்ளன. இவை தவிர்த்து அந்தப் பகுதியில் வேறு எந்த தகவல்களும் கிடையாது. விடை எழுதும் பகுதி மட்டுமே, மதிப்பெண் மதிப்பிடுவதற்கு கொண்டுச் செல்லப்படுகிறது.

இதனால் விடை எழுதும் பகுதியில், எழுத்து வடிவில் எதுவும் இல்லாததால் மாணவர்கள் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பே இல்லை என சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் கூறுகிறது.

ஏனெனில் 'கோடிங்' முறையில் உள்ள விடைத் தாளை ஸ்கேன் செய்து கணினி மூலமே மதிப்பீடு செய்யும் பணி நடைபெறும் என்பதால், யாருடைய விடைத் தாள்களையும் எவரும் கண்டறிய முடியாது என்பது இதன் சிறப்பு.

ஐ.ஜி. முன்னிலையில் மதிப்பீடு: விடைத் தாள்களை மதிப்பீடு செய்யும் பணி அவுட்சோர்சிங் மூலம் தனியாரிடம் வழங்கப்பட்டாலும், விடைத் தாள்கள்
தேர்வு குழுமத்தின் ஐ.ஜி. அளவிலான அதிகாரிகள் முன்னிலையே மதிப்பீடு செய்ய இந்த முறை முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் முன்னிலையிலேயே, தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களும் கணினியில் பதிவேற்றம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விடைத்தாளுக்கு ரூ.12 செலவு: இது தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறியது:

சாதாரண விடைத் தாள்களை தயாரிக்க ஒரு விடைத் தாளுக்கு ரூ.6 வரை செலவிடப்படும். இப்போது பார்கோடுடன் சேர்ந்த விடைத் தாளை தயாரிப்பதற்கு ரூ.12 வரை செலவிடப்பட்டுள்ளது. வினாத் தாள்களும், விடைத்தாள்களும் இருக்கும் பார்சலை ஒவ்வொரு மாவட்டத்தின் தேர்வு பொறுப்பாளராக இருக்கும் அதிகாரி திறக்கும்போது, அதை விடியோவில் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல முறைகேட்டை முற்றிலும் தடுப்பதற்காக விடைத் தாள் மதிப்பீடு செய்யும் பணியை முழுமையாக விடியோ கேமராவில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முறைகேட்டை எங்களால் முற்றிலும் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.

20 பேருக்கு ஒரு கண்காணிப்பாளர்
மாநிலம் முழுவதும் 3.20 லட்சம் பேர் எழுதும் காவலர் எழுத்துத் தேர்வில் 20 பேருக்கு ஒருவர் என்ற வகையில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக்குரிய வினாத் தாள்,விடைத் தாள் பார்சலை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து டிஎஸ்பி மற்றும் ஏடிஎஸ்பி அளவிலான அதிகாரிகளே சென்னை எழும்பூரில் உள்ள சீருடைப் பணியாளர் தேர்வு குழும அலுவலகத்தில் இருந்து பெற்றுச் செல்ல வேண்டும். அந்த பார்சலை அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளரிடமே நேரடியாக ஒப்படைக்க வேண்டும். காவல் கண்காணிப்பாளர் விடியோ கேமரா முன்னிலையே அந்த பார்சலை திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகளை தேர்வு குழுமம் விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com