சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,
சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): மகளிரின் முன்னேற்றம் மற்றும் சுதந்திரத்தை முன்னிறுத்தி மார்ச் 8 -ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் முன்னேற்றம் என்பதும், மகளிர் பாதுகாப்பு என்பதும் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 13 அம்ச திட்டமும் பெண்களின் பாதுகாப்பில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குடும்ப வன்முறையைத் தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இலவச தொலைபேசி சேவையை (ஹெல்ப்லைன்) உருவாக்க வேண்டும். 
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): பல ஆண்டுகளாக பெண்களின் உரிமைக்காகப் பலர் போராடி வந்தாலும், நாடாளுமன்ற சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக, மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு அந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றாத காரணத்தால் மகளிர் இடஒதுக்கீடு கனவாகவே இருந்து வருகிறது. இம்மசோதாவை நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச மகளிர் தினத்தில் சூளுரை ஏற்போம்.
ராமதாஸ் (பாமக): சமூகச் சூழலை எடுத்துக் கொண்டால், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் மது தான். உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வென்றதைப் போல, தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாம் போராட வேண்டும். 
அன்புமணி (பாமக): உலகிலேயே மகளிருக்கு மிகுந்த மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். மரியாதைக்குரியவர்களாக இருக்கும் பெண்களை கல்வி, அரசியல், சமுதாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உயர்த்த வேண்டியது அவசியமாகும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தமிழகத்தில் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை. மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அனைத்து அரசு பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். 
ஜி.கே.வாசன் (தமாகா): பெண்கள் எல்லாத் துறைகளிலும் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகம் வழங்கினால் மென்மேலும் முன்னேறி குடும்பத்தையும், நாட்டையும் மேலும் முன்னேற்றம் அடையச் செய்வார்கள். பெண்களின் சுய மரியாதை, உரிமை மற்றும் பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
வைகோ (மதிமுக): இருபதாம் நூற்றாண்டில் பெண் உரிமைக்காக குரல் கொடுத்தவர் பெரியார். அவருடைய துணைவியார் நாகம்மாளும், சகோதரி கண்ணம்மாளும் மதுவை எதிர்த்துப் போராடினர். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் பிரகடனம் செய்தார். திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றினார். ஆனால், தமிழகத்தின் இன்றைய நிலை மிகவும் கவலை தருகிறது. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதற்கு மது அரக்கனும் ஒரு காரணம். எனவே, பெண்களின் மாண்பைக் காக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com