கவிமணியின் கூற்று மெய்ப்படுகிறது!: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றை மெய்ப்படுத்தும் முயற்சி நெல்லைத் தரணியிலிருந்து தொடங்குகிறது

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றை மெய்ப்படுத்தும் முயற்சி நெல்லைத் தரணியிலிருந்து தொடங்குகிறது என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
திருநெல்வேலியில் நடைபெற்ற மகளிர்மணி பெண் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது: பெண்களின் விடுதலைக்காக முதல் குரல் கொடுத்த பாரதி பிறந்த பூமியில் இருந்து 'மகளிர்மணி சாதனையாளர் விருது' வழங்கும் தினமணி நாளிதழின் முயற்சி தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெண் சாதனையாளர்களை ஆண்டுதோறும் அடையாளம் கண்டு கெளரவிக்கும் பணி தொடரும். அதன்பின், தமிழக அளவிலும் பெண் சாதனையாளர்களைக் கெளரவிக்க வேண்டும் என்கிற கனவு நனவாக வேண்டும்.
மகளிருக்காக ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற சூழல் இருப்பது சரியானதல்ல. இந்தியாவில் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை பெண்கள் வகித்தாலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண்கள் வரவில்லை என்பது குறையாகவே உள்ளது. பெண்கள் குறித்த முக்கிய தீர்ப்புகள் வழங்கும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற அமர்வுகளில் பெண் நீதிபதிகளே இல்லாதது கூர்ந்து கவனிக்கத்தக்கது. அதேபோல பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் சாதித்தாலும்கூட இந்திய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக உயரும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு என்பது தலைகுனிவைத் தருகிறது. இந்த நிலை விரைவில் மாற வேண்டும்.
ஆண் வாரிசு என்னும் பாரம்பரிய பழக்கவழக்கம், திருமணச் செலவு போன்ற பல்வேறு காரணங்களால் மட்டுமன்றி, இன்றைய சூழலில் பெண்களை வளர்ப்பதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாலும் ஆண்-பெண் விகிதாசார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றுவதற்கு, மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். தடைக்கற்களைத் தாண்டி சாதிக்கும் பெண்களை அடையாளப்படுத்த வேண்டும். அதன் மூலம் பிற பெண்களுக்கு ஊக்கமும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துணிவும் உருவாகும்.
சங்க காலத்தில் இருந்தே பெண்களுக்கு மரியாதை செய்யும் சமூகமாகவே தமிழ்ச் சமூகம் இருந்துள்ளது. பொதிகைச் சாரலில் இருந்து தொடங்கியுள்ள இந்த ஊக்கப்படுத்தும் முயற்சி, இந்தியாவில் சிறந்த பெண் சாதனையாளர்களாக தமிழ்ப் பெண்கள் உருவாக வழிகோல வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com