காவலர் தாக்கி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர்
காவலர் தாக்கி கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி உஷா உயிரிழந்த செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இந்தச் செயல் வேதனையளிக்கிறது. இதைக் கண்டித்து அமைதியாகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்துக்குரியது.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): கர்ப்பிணியின் மரணம் மனவேதனை அளிக்கிறது. இது காவல்துறை அதிகாரியின் அடாவடியான, மனிதாபிமானமற்ற, சட்டத்தை மீறிய காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு காரணமான காவல் துறை அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும்.
கனிமொழி (திமுக): திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா இறந்துள்ளார். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான காவலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். 
அன்புமணி (பாமக): இந்த விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் மனித நாகரிகத்துக்கு சற்றும் ஒவ்வாதது. ஒருவர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அவரது வாகனத்தை எட்டி உதைக்கும் அதிகாரத்தை காவலர்களுக்கு எந்தச் சட்டம் வழங்கியது? கைது செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் மகத்துவம் குறித்து காவலர்களுக்கு போதிக்க வேண்டும்.
விஜயகாந்த் (தேமுதிக): இருசக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணி உஷா, காவல்துறை நடவடிக்கையால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருபுறம் மனஉளைச்சலால் காவலர்கள் தங்களை, தாங்களே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், இதுபோல அராஜகத்தில் ஈடுபடும் காவல்துறையினரையும் தமிழகத்தில் பார்க்க முடிகிறது. ஆட்சி நிர்வாகம் சரியில்லாததே இந்த குறைபாடுகளுக்குக் காரணம். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 
ஜி.கே.வாசன் (தமாகா): கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை ஆய்வாளரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களிடம் விசாரித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, வாகனத்தைத் துரத்தி சென்று, எட்டி உதைத்தது மனிதாபிமானமற்ற செயல். 'காவல்துறை பொதுமக்களின் நண்பன்' என்று ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்திருப்பது எந்தவிதத்திலும் நன்மை பயக்கவில்லை. 
ஜவாஹிருல்லா (மமக): கர்ப்பிணியின் மரணத்துக்கு காரணமான போக்குவரத்து காவல் ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். துறைரீதியான நடவடிக்கை மட்டும் இதற்குத் தீர்வாக இருக்காது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை உடனே பணியிலிருந்து நீக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com