காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும்: புதுவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும் என்று, புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் வே.நாராயணசாமி. உடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய முதல்வர் வே.நாராயணசாமி. உடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்.

காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும் என்று, புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தில்லியில் காவிரி நீர் தொடர்பாக 4 மாநில தலைமைச் செயலர்களுடனான கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 9) நடைபெற உள்ளது. இதில் புதுவை மாநிலம் சார்பில் தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், செயலர் அன்பரசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்திருந்தார். 
இதையடுத்து, வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், முதல்வர் நாராயணசாமி, பேரவைத் தலைவர் வைத்திலிங்கம், பொதுப் பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளபடி, காரைக்கால் பகுதிக்கு 7 டி.எம்.சி. கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். 
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநிலங்களுக்கான மாதாந்திர நீர்ப் பங்கீடு உறுதி செய்யப்பட வேண்டும்.
கூட்டத்துக்குப் பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என்றும், அவ்வாறு நிறைவேற்றாவிட்டால், அடுத்ததாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் தில்லிக்கு அழைத்துச் சென்று புதுவை அரசின் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்றார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com