சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்துள்ளார். 
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் தினவிழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் தினவிழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. 

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரித்துள்ளார். 
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத் திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கினர். இதையடுத்து நிருபர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க சட்டம் இயற்றியதோடு, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார் என்றார்.
திருச்சி சம்பவத்தில் உரிய நடவடிக்கை: இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டி: திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் ஒரு பொக்கிஷம்: பெரியார் குறித்து பதிவு செய்யப்பட்ட கருத்து தனக்கு தெரியாமல் உதவியாளர் பதிவு செய்து விட்டதாகக் கூறி ஹெச். ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார். 
அவருக்குத் தெரியாமல் நடந்திருந்தாலும் அது கண்டனத்துக்குரியதுதான். பெரியார் ஒரு பொக்கிஷம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டவர் .
கடும் நடவடிக்கை: தமிழகத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
சிலைகளின் மீது பெயின்ட் ஊற்றினாலோ, சேதப்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்களின் சிலையை யாராவது சேதப்படுத்தப் போகிறார்கள் என்கிற தகவல் கிடைத்தால் கூட அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் முதல்வர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது: 
ஹெச்.ராஜா பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது. சுட்டுரையில் தனது உதவியாளர் பதிவு செய்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவரின் மனமும் புண்பட்டுள்ளது. எனவே அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
அரசியலில் வெற்றிடம் இல்லை
தமிழக அரசியலில் வெற்றிடம் ஏதுமில்லை என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்று நடிகர் ரஜினி கூறி இருக்கிறார். அது அவரது (ரஜினி) கருத்து. இப்போது நடைபெறும் அதிமுக ஆட்சி கூட எம்ஜிஆர் ஆட்சிதான். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க ஜெயலலிதா பாடுபட்டார். மறைந்த இரு தலைவர்களும் இறுதி வரை மக்களுக்காக பாடுபட்டனர். எனவே, தமிழகத்தில் வெற்றிடம் என்பதற்கு இடமில்லை. ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ அதே போன்ற ஆட்சியை அவரது மறைவுக்குப் பிறகு வழங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்துக்கு இடமில்லை என்றார் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com