சேலத்தில் 1,000 ஏக்கரில் ராணுவ தளவாட உற்பத்தி மையம்: பாராசூட் உள்ளிட்ட தளவாட பொருள்கள் தயாரிக்க வாய்ப்பு

சேலத்தில் 1,000 ஏக்கரில் அமையும் ராணுவ தளவாட உற்பத்தி மையம் மூலம் ராணுவத்துக்குத் தேவையான பாராசூட், துணி வகைகளைத் தயாரிப்பதற்கு தொழில்வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக

சேலத்தில் 1,000 ஏக்கரில் அமையும் ராணுவ தளவாட உற்பத்தி மையம் மூலம் ராணுவத்துக்குத் தேவையான பாராசூட், துணி வகைகளைத் தயாரிப்பதற்கு தொழில்வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைப்பதற்கான 1,000 ஏக்கர் கொண்ட மூன்று இடங்கள் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 
உற்பத்தி மையம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு மூலம் மாவட்ட நிர்வாகம் செய்து தரும்.
சேலத்தில் ஜவுளித் தொழில் அதிகமாக இருப்பதால், விமான வீரர்களுக்குத் தேவையான பாராசூட் மற்றும் சீருடைகளைத் தயாரிப்பது போன்ற வகைகளில் தொழில் முனைவோர் கவனம் செலுத்தி, அதுதொடர்பான உற்பத்தியை ராணுவத்துக்கு வழங்கலாம். இதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருகும் என்றார்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் (டி.ஆர்.டி.ஓ.) துணைத் திட்ட அலுவலர் சி.எஸ். சாவ்லா பேசியது:
சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ரூ. 2 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை முதலீட்டில் உற்பத்தி மையங்களைத் தொடங்கலாம். இதற்கென பிரத்யேக ராணுவ முதலீட்டு பிரிவை அணுகி உரிமம் பெறுவது போன்ற சேவைகளைப் பெறலாம்.
ராணுவத்துக்குத் தேவையான துப்பாக்கிகள், இலகு ரக இயந்திர துப்பாக்கிகள், நீர் மூழ்கிக் கப்பல்கள், இலகு ரக விமானத்திற்கு உதிரிபாகங்களைத் தயாரிப்பதன் மூலம் தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.
இங்கு உற்பத்தியாகும் பொருள்கள் பெங்களூரில் உள்ள பல்வேறு ராணுவம், விமான படை ஆராய்ச்சி மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.
சென்னையில் வரும் ஏப்ரல் 11 முதல் 14 வரையில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைக்கலாம் என்றார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) தலைவர் ஆர்.சி. மீனா பேசியது:
தமிழகம் ராணுவத்துக்குத் தேவையான தளவாடப் பொருள்களைத் தயாரித்து அனுப்புவதில் கணிசமான பங்கு வகிக்கிறது. ஏற்கெனவே சென்னை அருகே 250 ஏக்கரில் விமான உதிரிபாகம் தயாரிக்கும் பூங்கா அமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.
டைடல் பார்க் மேலாண் இயக்குநர் பி.இளங்கோவன் பேசியது: அடுத்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி முதல் 7 லட்சம் கோடி வரை ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அதில் சிறு, குறுந்தொழில் நிறுவனத் தயாரிப்புகளில் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ. 20,000 கோடி முதல் ரூ. 30,000 கோடி வரையிலானத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்ததொழில் வாய்ப்புகளை ராணுவத் தளவாட உற்பத்தி மையம் மூலம் பெறலாம் என்றார்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் (டி.ஆர்.டி.ஓ.) முன்னாள் இயக்குநர் ஜெனரல் கே.தமிழ்மணி பேசியது:
சேலம் விமான நிலையம் முழு அளவில் பயன்பாட்டுக்கு வரும்போது ஹெலிகாப்டர் இயக்குதல், ஆளில்லா விமானம் தயாரிப்பு, விமான கிளப் போன்றவை அமையும். இதையொட்டி, பல்வேறு தொழில் வாய்ப்புகள் பெருகும்.
சேலம் ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தில் தயாராகும் இரும்பு கம்பிகள் சுமார் 1,155 மெட்ரிக் டன் அளவுக்கு ராணுவத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோல இங்கு அதிகளவில் ஜவுளித் தொழில் இயங்கி வருகிறது.
சேலம் ராணுவ தளவாட உற்பத்தி மையத்தைத் தொடங்குவதற்கு ஆட்சியர் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு, வல்லுநர்கள் குழு அமைத்து விரிவாக ஆலோசிக்கப்படும். தொழில் வாய்ப்புகள் அடையாளம் காணப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com