பூம்புகார் தயாரிப்புகளுக்கு சமூக ஊடகங்களில் பிரசாரம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பூம்புகார் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அவற்றின் தயாரிப்புகள், சிறப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த கைவினைஞர்களுக்கு  'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருது, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது வழங்கிய முதல்வர் 
சென்னை கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த கைவினைஞர்களுக்கு  'வாழும் கைவினைப் பொக்கிஷம்' விருது, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது வழங்கிய முதல்வர் 

பூம்புகார் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அவற்றின் தயாரிப்புகள், சிறப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற கைவினைஞர்கள் தினவிழாவில் முதல்வர் பழனிசாமி பேசியது:
பூம்புகார் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக அம்சங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட கணினிமயமாக்கியதால் 30 நாள்களில் எடுக்கப்பட்டு வந்த கோப்புகளின் முடிவுகள் இப்போது 3 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு காகிதமற்ற கோப்பு நடவடிக்கை நிறுவனம்.
வருவாய் அதிகரிப்பு: மேலும், டேலி கணக்கியல், ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா கண்காணிப்பு, பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு, பார்கோடிங், மின்னணு வர்த்தகம் போன்றவற்றால் நிறுவனத்தின் வருவாய் அளவு இப்போது ஆண்டுக்கு ரூ.40.35 கோடியாக உயர்ந்துள்ளது. 
இந்நிறுவனத்தில் மின் ஆளுமையை நடைமுறைப்படுத்தியதால், பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. 
கைத்திறன் துறையானது ஒரு மின்னணுப் புரட்சியை செய்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும். 
விற்பனை நிலையங்கள்: கைவினைப் பொருள்களைத் தயாரிப்பதற்கான சிறந்த பணிச் சூழல், சந்தை வசதி போன்றவற்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாச்சியார்கோவில், சுவாமிமலை, தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, வாகைகுளம் ஆகிய இடங்களில் கைவினைஞர்களுக்கான பொது வசதி மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் இம்மையம் வரும் ஆண்டுகளில் அமைக்கப்படும். வெளிநாட்டினரும், வாடிக்கையாளர்களும் அதிகளவு வருகை தரும் முக்கிய இடங்களான சர்வதேச விமான நிலையங்கள், அருங்காட்சியகங்களில் பூம்புகார் விற்பனை நிலையங்களின் நிஜ தோற்றக் காட்சி உள்ளது உள்ளபடி தத்ரூபமாக நிறுவப்படும்.
மின் வணிகம்: மின் வணிக ஜாம்பவான்களாகத் திகழும் ஸ்னாப்டீல், ஃபிளிப்கார்ட் போன்றவற்றின் மூலமாக பூம்புகார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் பூம்புகார் தயாரிப்புகளை மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. இதனால், விற்பனையின் அளவானது உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதிகரித்துள்ளது. 
சமூக வலைதளங்கள் மூலம் சந்தை வாய்ப்பைப் பெற உலகளவில் பிரசித்தி பெற்ற இணையதள சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் முதல்வர் பழனிசாமி.
விருதுகள்: இந்த விழாவில், கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் 2 பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. 
பழம்பெரும் கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான விருதுகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கினர். 97 வயதான மரம் மற்றும் கற்சிற்பக் கலைஞர் எம்.நடராஜன் உள்பட பல்வேறு பிரிவுகளில் கலைஞர்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டன.
முன்னதாக, ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின் வரவேற்றார். கைத்தறி, கைத்திறன்கள் துறை முதன்மைச் செயலர் பணிந்திரரெட்டி நன்றி தெரிவித்தார். 
விழாவுக்கான ஏற்பாடுகளை கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சந்தோஷ்பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
செய்யும் விஷயங்களை திருந்தச் செய்ய வேண்டும்: துணை முதல்வர்
கைவினைஞர்கள் தினத்தையொட்டி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
செய்யும் விஷயங்களை எப்போதும் திருந்தச் செய்ய வேண்டும். இதைக் கூறியவுடன் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு கைவினைஞர் அவரது கலைக்கூடத்தில் ஒரு சாமி சிலையைச் செய்து கொண்டிருந்தார். அதன் அருகில் இன்னொரு சிலையும் இருந்தது. இதைப் பார்த்த அவரது நண்பர் ஏன் இரண்டு சிலைகள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த கைவினைஞர், ஏற்கெனவே செய்த சிலையின் மூக்கில் சிறிய குறை ஏற்பட்டு விட்டது. அதனால் புதிதாக ஒரு சிலையைச் செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.
அப்போது பேசிய நண்பர், அருகில் இருந்து பார்க்கும் போதே, சிலையின் மூக்கில் இருக்கும் குறைபாடு எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், கோபுரத்தில் உயரத்தில் வைத்துப் பார்க்கும் போது இந்தக் குறை தெரியவா போகிறது எனக் கேள்வி எழுப்பினார். 
அதற்கு கைவினைஞர், உனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கோயிலைக் கடந்து போகும் போது, சிலையை பார்க்கும்போதெல்லாம், எனக்கு அந்தக் குறைபாடு தெரியும். அதனால்தான் வேறொரு சிலை செய்கிறேன் என்றார்.
எனவே, செய்வதை திருந்தச் செய்ய வேண்டும். உண்மையான கலைஞர்களுக்கும், கைவினைஞர்களுக்கும் வெறும் ஊதியம் மட்டுமே உற்சாகத்தைத் தந்து விடாது. 
அவர்களுக்குக் கிடைக்கும் விருதுகள்தான் அவர்களுக்கு மேலும் பல புதுமையான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com