ஸ்ரீ ஜயேந்திரர் ஆற்றிய பணிகள் மகத்தானவை : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புகழாரம்

ஆன்மிகத்திலும், பொதுவாழ்விலும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்ஆற்றிய பணிகள் மகத்தானவை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
காஞ்சி சங்கர மடத்துக்கு வருகை தந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
காஞ்சி சங்கர மடத்துக்கு வருகை தந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

ஆன்மிகத்திலும், பொதுவாழ்விலும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்ஆற்றிய பணிகள் மகத்தானவை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி சித்தியடைந்தார். இதையொட்டி, அவரது பிருந்தாவன நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக கைத்தறித்துறைஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் வியாழக்கிழமை சங்கர மடத்துக்கு வந்தார். அங்கு, ஸ்ரீஜயேந்திரர் பிருந்தாவனத்தில் அஞ்சலி செலுத்தினார். 
தொடர்ந்து, சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 
அதன்பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மறைவு ஆன்மிக உலகுக்குப் பேரிழப்பாகும். அவர், ஆன்மிகத்திலும், பொதுவாழ்விலும் ஆற்றிய பணிகள் மகத்தானவை. இயற்கையை வெல்ல முடியாது. இருப்பினும், அவரின் சிந்தனையை அனைவரும் செயல்படுத்துவது உலகுக்கு ஆற்றும் நற்காரியமாகும். 
பெண்ணினம் மேம்பட்டு மென்மேலும் வாழ்வதற்கு உலக மகளிர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 
பெரியார் ஈ.வெ.ரா. போல் பிற மாநிலங்களில் யாரும் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு நிகரான விழிப்புணர்வு பிற மாநிலங்களில் குறைவாக இருக்கிறது. 
விழிப்புணர்வையும், பகுத்தறிவையும் தமிழகத்தில் விதைத்தவர் பெரியார். அந்த விதை இன்றைக்கு அடித்தட்டு மக்களையும் தட்டி எழுப்பியிருக்கிறது. குறிப்பாக, பெண்ணினத்தின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக, தமிழகத்தில் கண்மூடித்தனமான நிலையை மாற்றிக் காண்பித்தவர் பெரியார். அத்தகைய பெருமைக்குரியவரின் சிலையை அகற்றுவேன் என்று ஹெச்.ராஜா கூறுவது தமிழக மக்களின் நெஞ்சங்களை சுடுவேன் என்று கூறுவதற்கு ஒப்பாகும். இச்செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
திருச்சியருகே திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீதான போலீஸாரின் அத்துமீறலால் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இது விரும்பத் தகாத செயலாகும். எனவே, காவல்துறை, அரசுத்துறைகளில் பணிபுரிபவர்கள் கோபத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் மக்களிடம் நடந்து கொள்ளவேண்டும். 
வரவிருக்கும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும் என்றார். நிகழ்வில், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com