இது உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்த தீ:  குரங்கணி சம்பவத்திற்கு சென்னை ட்ரெக்கிங் க்ளப் விளக்கம் 

வழக்கமான விவசாய நடைமுறைப்படி உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்த தீ இது என்று குரங்கணி தீ விபத்து  சம்பவத்திற்கு சென்னை ட்ரெக்கிங் க்ளப் விளக்கமளித்துள்ளது.
இது உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்த தீ:  குரங்கணி சம்பவத்திற்கு சென்னை ட்ரெக்கிங் க்ளப் விளக்கம் 

சென்னை: வழக்கமான விவசாய நடைமுறைப்படி உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்த தீ இது என்று குரங்கணி தீ விபத்து  சம்பவத்திற்கு சென்னை ட்ரெக்கிங் க்ளப் விளக்கமளித்துள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர்  அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

இதில் சென்னையிலிருந்து 27 பேரடங்கிய குழு ஒன்று 'சென்னை ட்ரெக்கிங் க்ளப்' என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் இந்த மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த குழுவில் இருந்து சென்றவர்களில் 7 பேர் தீ விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்கள். இந்நிலையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக தற்பொழுது அந்த அமைப்பு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் , 'வழக்கமான விவசாய நடைமுறைப்படி உள்ளூர் விவசாயிகள் பற்ற வைத்த தீ தான் இது' என்று தெரிவித்துள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு குரங்கணியில் எங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மலையேற்றத்தில் நடந்த தீ விபத்தில் பலியானவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொளிறோம்.

அனுபவம் வாய்ந்த எங்களது மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்களான நிஷா மற்றும் திவ்யா  ஆகிய இருவரும், அருண் மற்றும் விபின் ஆகிய இருவரின் உதவியுடன் 27 பேரை இந்த 2 நாள் மலையேற்ற பயணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி அவர்கள் 10-ஆம் தேதியன்று காலை குரங்கணி அடிவாரத்திலிருந்து தங்கள் பயணத்தினை துவக்கியுள்ளனர். அதற்காக அங்குள்ள வனத்துறை பரிசோதனை மையத்தில் நுழைவுக் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். குரங்காணியில் இருந்து மேலேயுள்ள கொலுக்கு மலை செல்வதற்கு அவர்கள் சென்ற பாதை என்பது உள்ளூர் மக்களும் மலையேறுபவர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ள நல்ல தெளிவான பாதை.

சனிக்கிழமை காலை அவர்கள் புறப்பட்ட பொழுது காட்டுத்தீ என்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. அன்று மாலையே அவர்கள் கொலுக்குமலை டீ எஸ்டேட்  சென்று, அங்கு முகாம் அமைத்து தங்கியுள்ளனர்.

ஞாயிறு காலை அவர்கள் கீழ்நோக்கி தங்கள் பயணத்தினை வந்த வழியாகவே துவக்கியுள்ளனர். ஏறக்குறைய நடு வழியை அவர்கள் வந்தடைந்துள்ளனர். இந்தப் பகுதி அடிவாரத்தில் உள்ள விவசாயிகள் எப்பொழுதும் இந்த காலகட்டத்தில் வழக்கமான விவசாய நடைமுறைப்படி,புற்களை தீயீட்டு கொளுத்துவது வழக்கம். அன்றும் அதே போலவே அவர்கள் பற்ற வைத்துள்ளதாகத் தெரிகிறது  

வழக்கத்துக்கு மாறாக போடி பகுதியில் அன்று நிலவிய காற்றழுத்த தாழ்வின் காரணமாக எதிர்பாராமல் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு பலத்த காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக வேகமாகப் பரவிய  தீயானது, உச்சியை நோக்கி பரவத் துவங்கியது.

உயிர் பிழைத்த ஒரு சிலரின் கூற்றுப்படி அதிகமாகப் பரவிய புகையின் காரணமாக அவர்கள் சுதாரிக்க இயலவில்லை. புகையை பார்த்தவுடன் வேறு வழியில் செல்ல எத்தனித்த அவர்கள் அந்த பகுதியில் நெருப்பினால் சூழப்பட்டுள்ளனர். அதுவே சிக்கலாக மாறியுள்ளது.

ஞாயிறன்று மதியம் எங்களுக்கான உள்ளூர் வழிகாட்டியுடன் தொடர்பு கொண்ட பொழுது அவர் குழுவினர் இருக்கும் இடம் பற்றிய துல்லியமான தகவலைத் தந்தார். அதை நாங்கள் உடனடியாக வனத்துறையுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களது தேடுதல் வேட்டையில் உதவினோம். அன்று மாலையே நடவடிக்கைகளுக்கு உதவ என்று தனியான குழு ஒன்று சென்னையிலிருந்து அனுப்பப்பட்டது.

அருணும் விபினும் அனுபவம் வாய்ந்த மலையேறுபவர்கள்.ஆபத்து கால தப்பிப் பிழைக்கும் பயிற்சியில் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் கடைசி வரை மற்றவர்கள் உயிரைக் காக்க போராடியுளார்கள் என்று நாங்கள் எண்ணுகிறோம். பங்கேற்பாளர்களின் ஒருவரான திவ்யா முத்துக்குமரன், மூன்று பேரை காப்பற்றி விட்டு, பின்னர் மீண்டும் மற்றவர்களைக் காப்பாற்ற உள்ளே சென்றவர் திரும்பவே இல்லை. தனது நண்பர்களைக் காப்பாற்ற அவர் தனது உயிரை இழந்துள்ளார்.

இந்த எதிர்பாராத விபத்தில் பலியான அனைவருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் துன்பத்தினை பகிர்ந்து கொள்வதோடு, உயிர் பிழைத்தவர்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி கூறுகிறோம்.

இவ்வாறு அந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com