காவல்துறை கண்காணிப்பில் 'சென்னை டிரெக்கிங் கிளப்'

தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் இறந்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் போலீஸார், சென்னை டிரெக்கிங் கிளப்பை

தேனி மாவட்டம், குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் இறந்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் போலீஸார், சென்னை டிரெக்கிங் கிளப்பை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வேன்ஹீத் (46), துரைப்பாக்கம் தனியார் நிறுவன முக்கிய நிர்வாகி. கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பாலவாக்கத்தில் வசித்து வந்த இவர், தனது நிறுவனத்தில் பணியாற்றும் நண்பருடன் கடந்த 2008 -இல் சென்னை டிரெக்கிங் கிளப்பைத் தொடங்கினார். பீட்டரின் வீடே இதற்கு அலுவலகமானது.
இந்த கிளப் மூலம் இருவரும், மலையேற்றப் பயிற்சி மட்டுமின்றி சைக்கிள், மோட்டார் சைக்கிள் பயணம் உள்ளிட்ட பல்வேறு சாகச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.கடற்கரை, நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளையும் செய்து வந்துள்ளனர். கடந்த 2015-இல் சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோதும், வர்தா புயல் தாக்கியபோதும், இந்த கிளப் உறுப்பினர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
30 ஆயிரம் உறுப்பினர்கள்: சென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள், தனியார் நிறுவன நிர்வாகிகள் என சுமார் 30 ஆயிரம் பேர் இந்த கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். 
போலீஸார் சோதனை: தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலையேற்றத்துக்கு இந்த கிளப்பில் இருந்து 27 பேர் பங்கேற்கச் சென்றுள்ளனர். 
பீட்டர் தலைமறைவு: இச்சம்பவத்தை அடுத்து பீட்டர் வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு இளைஞர்களை அழைத்துச் செல்லும் அந்த கிளப்பின் மீது அரசு உத்தரவு கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். தலைமறைவாக இருக்கும் பீட்டரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஏஜென்ட் கைது: இதனிடையே, கேரளம், சூரியநெல்லி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், சென்னை டிரெக்கிங் கிளப் சார்பில் குரங்கணி-கொழுக்குமலை வனப் பகுதிக்கு மலையேற்றப் பயிற்சிக்கு வந்து செல்வோருக்கு ஏஜென்டாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கிய சம்பவத்தை அடுத்து, ராஜேஷை போடி வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com