குரங்கணி வனப்பகுதி தீ விபத்தால் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

தேனி மாவட்டம் குரங்கணி வனத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குரங்கணி வனப்பகுதி தீ விபத்தால் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

தேனி மாவட்டம் குரங்கணி வனத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): தேனி மாவட்டம் குரங்கணி காட்டில் மலையேற்றத்துக்குச் சென்றவர்களில், காட்டுத் தீயில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள செய்தியால் அதிர்ச்சிக்குள்ளானேன். மத்திய, மாநில அரசுகளுடன் மலைவாழ் மக்களும் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. தீக்காயத்துக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் முழுமையான குணம் பெற்று விரைவில் வீடு திரும்ப தேவையான உயர்தர சிகிச்சைகளை அளிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மலையேற்றத்துக்கு குரங்கணி காட்டுப் பகுதிக்கு செல்வோரின் பாதுகாப்புக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் எடுக்க வேண்டும். 
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை வழங்க வேண்டும், சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்பதுடன், தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். மேலும், இந்த விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
ராமதாஸ் (பாமக): குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து உயிரிழப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பழக்கமில்லாத மலைப்பகுதியில் மலையேற்றத்துக்குச் செல்லும்போது வனத்துறையினரிடம் அனுமதி வாங்கி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தவர்களை அல்லது வனத் துறைப் பணியாளர்களை வழிகாட்டியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், இதை மலையேற்ற நிறுவனம் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. சாகசம் படைக்கும் நோக்குடன் சென்ற மாணவர்கள் சடலமாகத் திரும்புவது சகித்துக் கொள்ள முடியாத சோகமாகும். 
ஜி.கே.வாசன் (தமாகா): குரங்கணி மலையில் கடந்த ஒருவார காலமாக அடிக்கடி தீப்பற்றி எரிவதாகக் கூறப்படுகிறது. ஆனால் தீயைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. மலைக்குச் செல்பவர்கள் வனத் துறையின் ஒப்புதல் பெற வேண்டும், மலையேறச் செல்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டும். 
ஜவாஹிருல்லா (மமக): மலையேறும் பயிற்சிகளை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் எந்தவித சரியான தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காதது தான் இந்த கோர விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த விபத்து தந்துள்ள படிப்பினைகளைக் கவனத்தில் கொண்டு மலையேற்றம் தொடர்பான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். 
தி.வேல்முருகன் (வாழ்வுரிமைக் கட்சி): குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மனித உயிர்கள் பலியானதைத் தடுக்க முடியாது போனதற்குக் காரணம், அடுத்தடுத்து பேரிடர்கள் வந்தபோதிலும் அதிலிருந்து நாம் எந்த பாடத்தையும் கற்காததுதான். இதுபோன்ற சமயங்களில் மீட்புப் பணியில் இறங்க இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் அமைப்பு தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை.
நிஜாமுதீன் (தேசிய லீக்): தீ விபத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்க நான்கு ஹெலிகாப்டர்கள் மாவட்ட நிர்வாகத்தால் கேட்கப்பட்டு இரண்டு அனுப்பப்பட்டு அதில் ஒன்று பழுதாகியுள்ளது. இதுதான் நமது இரானுவத்தின் நிலையா , இதுபோன்ற எதிர்பாராத விபத்து நிவாரண பணிக்காக தமிழ்நாடு காவல்துறைக்கும் தீயணைப்புத்துறைக்கும் போதிய ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட வேண்டும். 
கமல்ஹாசன் (மநீம): மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும்.மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். இறந்தவர்களின் உற்றாருக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கவிஞர் வைரமுத்து: உயிர் வலிக்கிறது. ஊரே அழுகிறது. காட்டுத் தீயில் கருகிய தங்கங்கள் மீது கண்ணீர் சொரிகிறேன். காயப்பட்டவர்கள் பிழைக்க வேண்டும் என்று பேராசை கொள்கிறேன். 
பெற்றோர் நிலையில் நின்று பெருவலி உணர்கிறேன். ''சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ, தீயே உனக்கொருநாள் தீமுட்டி பாரோமோ'' என்ற கண்ணதாசன் வரிகளைக் கடன் வாங்கி கலங்குகிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com