தமிழகத்தில் மேலும் 2,000 ஏரிகள் குடிமராமத்து செய்ய ரூ.300 கோடி ஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் மேலும் 2,000 ஏரிகள் குடிமராமத்து செய்ய ரூ.300 கோடி ஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேலும் 2,000 ஏரிகள் குடிமராமத்து செய்ய ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேலும் 2,000 ஏரிகள் குடிமராமத்து செய்ய ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.
சேலம் சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு 1,004 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிப் பேசியது: 
தமிழகம் முழுவதும் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 3,30,000 பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும். 
இந்தியாவிலே எந்தவொரு மாநிலத்திலும் இத் திட்டம் கிடையாது. பதிவு செய்த 3.30 லட்சம் பயனாளிகளில் முதல்கட்டமாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டு, பின்னர் மற்ற பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
மேட்டூர் அணை 84 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. கடந்தாண்டில் குடிமராமத்துத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, வண்டல் மண் எடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது. 
விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை எடுத்து தங்களது விவசாய நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேட்டூர் அணையானது ஆழப்படுத்தப்பட்டு, 10 டி.எம்.சி. முதல் 15 டி.எம்.சி. வரை நீரை சேமிக்கலாம். மேலும், பருவ காலங்களில் அதிக வெள்ள நீர் வரும் 
போது அதை தேக்கி வைத்து பயன்படுத்த முடியும். மழை நீர் வீணாகாமல் தடுத்து விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியும். 
பிரமாண்ட பேருந்து நிலையம்: தமிழகத்திலேயே முதல்முறையாக சேலம், மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் விமான நிலையம் போல, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய 'பஸ் போர்ட்' எனப்படும் பிரமாண்ட பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. சேலத்தில் அரபிக் கல்லூரி அருகில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். 
இந்தியாவிலேயே இரண்டாவதாக சேலம் முதல் சென்னை வரை 8- வழி பசுமைச் சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் சேலம், திருவண்ணாமலை, செங்கம் வழியாக மூன்றே கால் மணி நேரத்தில் விரைவாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. 
அதேபோல, திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக ஓமலூர் வûயும் நாமக்க ல்லிலிருந்து திருச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. மேலும், பவானியிலிருந்து, மேட்டூர், தொப்பூர் வரை 4-வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. 
குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,535 ஏரிகள் பணி நிறைவடைந்து, ஆழப்படுத்தப்பட்டுள்ளன.
விவசாயிகள் மீண்டும் கோரிக்கை வைத்ததன் பேரில், மேலும் சுமார் 2,000 ஏரிகள் குடிமராமத்துத் திட்டத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏரிகளை ஆழப்படுத்தும்போது நீர் அதிகமாகச் சேமிக்கப்படுகிறது. 
மேலும், ஆங்காங்கே தடுப்பணை கட்டும் 3 ஆண்டு திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுப்பணை கட்டி சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த ஆண்டு இதற்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
அரசு நிர்வாகத்தில் எந்தவொரு கோப்பும் நிலுவை வைக்காமல் தீர்வு காணப்பட்டு வருகிறது. தொழில் வளம் பெருகுவதற்காக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் ஜனவரி 2019-இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் படித்த எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com