விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்குரைஞர் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தின் முன் திங்கள்கிழமை ஆஜரான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் திரிபாதி.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தின் முன் திங்கள்கிழமை ஆஜரான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் திரிபாதி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்குரைஞர் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவர்கள் வீட்டில் பணியாற்றியவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிசிச்சை விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அண்மையில் சமர்ப்பித்தது. ஜெயலலிதா மரணம் குறித்து தெரிந்த தகவல்களை அளிக்குமாறு சசிகலாவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி இருந்தது.
கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி: தனக்கு எதிராக ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை வழங்குமாறு சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து, 2,956 பக்கங்கள் அடங்கிய 450 ஆவணங்களை சசிகலாவுக்கு ஆணையம் வழங்கியது. இதையடுத்து, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி 5-ஆம் முறையாக சசிகலா தரப்பில் செய்யப்பட்ட மனுவை விசாரணை ஆணையம் கடந்த 6-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் திங்கள்கிழமை ஆஜரான அவரது வழக்குரைஞர் அரவிந்தன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து வழக்குரைஞர் அரவிந்தன் செய்தியாளர்களிடம் கூறியது:
'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை பலமுறை சந்தித்துப் பேசிய பிறகு தயாரிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதில், உள்ள விவரங்களைத் தெரிவிக்க முடியாது. இனி விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி கடிதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
டிஜிபி திரிபாதி ஆஜர்: இந்நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் திரிபாதி விசாரணை ஆணையத்தில் திங்கள்கிழமை ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார். 
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2011-13-ஆம் ஆண்டு வரை பெருநகர சென்னை மாநகரக் காவல் துறை ஆணையராகவும், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாகவும் திரிபாதி இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான அதிகாரியாகவும் திரிபாதி அறியப்பட்டவராவார்.
பூங்குன்றன் மனு தள்ளுபடி: ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.இவர், விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com