அம்மா குடிநீர் கூடுதலாக 50 ஆயிரம் லிட்டர் உற்பத்தி: கோடையைச் சமாளிக்க ஏற்பாடு

கோடை வெயிலை சமாளிக்க பேருந்து நிலையங்களில் விற்கப்படும் அம்மா குடிநீர், கூடுதலாக 50 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்

கோடை வெயிலை சமாளிக்க பேருந்து நிலையங்களில் விற்கப்படும் அம்மா குடிநீர், கூடுதலாக 50 ஆயிரம் லிட்டர் உற்பத்தி செய்யப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு கடந்த 2013-ஆம் ஆண்டு அம்மா குடிநீர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
அம்மா குடிநீர் திட்டத்தின்கீழ் தேவைக்கேற்ப இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, பேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும்
1 லட்சத்து 50 ஆயிரம் பாட்டில்கள் குடிநீருடன் கூடுதலாக 50 ஆயிரம் பாட்டில்கள் அதிகரிக்க திட்டமிடப்பட்டு உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியது: பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவ்வப்போது குடிநீர் உற்பத்தியை அதிகரித்து வருகிறோம். தற்போது வெயில்
தாக்கம் அதிகமாக உள்ளதால் ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 50 ஆயிரம் பாட்டில்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
கூடுதல் உற்பத்தி நிலையம்: இந்நிலையில் கூடுதலாக ஒரு குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com