என் முகத்தில் கரி பூச நினைத்து, அவர்கள் பூசி கொண்டனர்: கமல் கட்சி அழைப்பு குறித்து தமிழிசை பதிலடி

முதலில் கமல்ஹாசன் நாகரீகமான அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
என் முகத்தில் கரி பூச நினைத்து, அவர்கள் பூசி கொண்டனர்: கமல் கட்சி அழைப்பு குறித்து தமிழிசை பதிலடி

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து விட்டதாக தனக்கு மின்னஞ்சல் வந்துள்ளதாக தனது ஐபேட்-இல் ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார்.அத்துடன் தனது மின்னஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது? கையில் கிடைக்கும் அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கு எல்லாம் கமல் கட்சியினர் அழைப்பு அனுப்பி ஆள் சேர்க்கிறார்கள். கமல் பொய்யான கட்சி நடத்தி வருகிறார் என்று குற்றசாட்டுகளை அடுக்கினார்.

இதுகுறித்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், கட்சியில் சேர யாருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. எங்கள் இணையதள பக்கத்தில் பதிவு செய்தால் மட்டுமே, அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். உங்களிடமிருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. உங்களைப் போல நாங்களும் படம் காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா... 

ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்துக்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது. அதுவரை.. என்பது போன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கமல் கட்சியின் விளக்கத்துக்கு பதிலடி அளித்துள்ளார். இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது:

நான் ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், ஒரு சிறிய குழந்தைக்குக் கூட தெரியும் (இதை விட மோசமான வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை), ஒரு கட்சியின் தலைவர் இப்படி வேறு கட்சிக்கு உறுப்பினராக விண்ணப்பிக்க முடியமா என்பது! இப்போது உள்ள தொழில்நுட்பத்தில் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். முதலில் செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த தவறை சரிசெய்துகொள்கிறேன் என்று ஒரு தலைவர் கூறுவதுதான் ஆரோக்கியமானது.

முதலில் கமல்ஹாசன் நாகரீகமான அரசியலில் ஈடுபடவேண்டும். தமிழகத்தில் நாகரிகமான அரசியலை எடுத்து செல்வதே பாஜகவின் கொள்கை. என் முகத்தில் கரி பூச நினைத்து, அவர்கள் பூசி கொண்டனர். அதிகாரப்பூர்வமாக எனது மின்னஞ்சல் முகவரியில் உங்களுடைய உறுப்பினர் எண் எப்படி வந்துள்ளது என்பதற்கு முதலில் பதில் கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com