குமரியில் அனுமதியின்றி நடைபெறும் மலையேற்றம்: வனத் துறை நடவடிக்கை எடுக்க சூழியல் ஆர்வலர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் காட்டுப் பகுதிகளில் புகுவது மற்றும் மலையேற்றம் செய்யவதை முற்றிலும் தடுக்க வேண்டுமென்று சூழியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோதையாறு பகுதியில் மலையில் ஏறும் விஞ்சிற்கான தண்டவாளத்துடன் காணப்படும் அழகிய காடு.
கோதையாறு பகுதியில் மலையில் ஏறும் விஞ்சிற்கான தண்டவாளத்துடன் காணப்படும் அழகிய காடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியில்லாமல் காட்டுப் பகுதிகளில் புகுவது மற்றும் மலையேற்றம் செய்யவதை முற்றிலும் தடுக்க வேண்டுமென்று சூழியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தொன்மையான காட்டு வளத்தைக் கொண்டதாகும். மாவட்டத்தில் ஏறக்குறைய 50,486 ஹெக்டேரில் காடுகள் உள்ளன. இது மாவட்டத்தின் மொத்தப் பரப்பில் 30.2 சதவீதமாகும். தமிழகத்தில் நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு அடுத்தாக 3 ஆவது பெரிய காட்டுப் பரப்பளவு இதுவேயாகும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாக உள்ள இக்காடுகளில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகளும், 100-க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், ஊர்வன வகைகளும் உள்ளன. இதுதவிர தேக்கு, ஈட்டி, சந்தனம் உள்ளிட்ட உயர் வகை மரங்களும், ஆபூர்வ வகை மூலிகையினங்களும் இக்காட்டில் உள்ளன.
குமரி மாவட்டத்தை மிதமான காலநிலை கொண்ட மாவட்டமாக இக்காடுகளே வைத்திருக்கின்றன. அங்குள்ள பசுமைமாறாக் காடுகளும், பள்ளத்தாக்குகளும், காட்டாறுகளும், அருவிகளும் கண்களுக்கும், மனதுக்கும் எப்போதும் விருந்தளிப்பவையாக உள்ளன.
காட்டுக்குள் அத்துமீறும் பயணிகள்: குமரியில் காட்டுப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் உள்பட பல்வேறு குழுக்கள் அடிக்கடி உரிய அனுமதியின்றி புகுந்து அங்கேயே முகாமிடுவது, மலையேற்றம் செய்வது, காட்டுக்குள் தீ மூட்டி சமையல் செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்ன. குறிப்பாக, காளிகேசம் மற்றும் பேச்சிப்பாறை, கோதையாறு உள்ளிட்ட இடங்களில் இச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. பேச்சிப்பாறை அணையை படகு வழியாகக் கடந்து காட்டுக்குள் முகாமிட்டு சமைப்பதும், மது அருந்துவதும் கட்டுப்பாடின்றி நடந்து வருகிறது. காட்டில் பல இடங்களில் காலி மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் போத்தல்களும் நிறைந்து காணப்படுகின்றன. அனுமதியின்றியும், அத்துமீறியும் காட்டுக்குள் நுழைந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க வனத் துறையினர் தவறி வருவதாக சூழியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். காட்டுக்குள் நுழையும் இத்தகையோரால் காட்டுக்கும், அவர்களுக்கும் பேராபத்து காத்திருக்கிறது என்பதை அவர்கள் உணருவதில்லையென்றே சூழியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குரங்கணி சம்பவம்: தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் மலையேற்றம் சென்ற குழுவினரில் சிலர் காட்டுத் தீயில் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் காடுகளில் அனுமதியின்றியும், அத்துமீறியும் புகுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சூழியல் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் ஆர்.எஸ். லால் மோகன் கூறியதாவது:
மலையேற்றம் என்பது சாகச சுற்றுலா அல்ல. இயற்கை மீதும் சூழியல் மீதும் ஆர்வம் கொண்டவர்கள், மரம், செடி, கொடிகள் மற்றும் விலங்கினங்களைக் குறித்து தெரிந்துகொள்ள காட்டுக்குள் செல்வதுதான் மலையேற்றம் ஆகும். இப்போது இதற்கு மாறாக மலையேற்றம் வணிக நோக்கில் பொழுதுபோக்கு உள்ளிட்ட வேறு காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. மலையேற்றம் செய்யும் பல குழுக்கள் காட்டு வளத்திற்கு பாதிப்பும் செய்கின்றனர். இயற்கை மீது அதீத ஆர்வம் இருந்தால்தான் மலையேற்றம் செல்ல வேண்டும். மலையேற்றம் செய்பவர்கள் காடுகளைக் குறித்தும், ஜீவராசிகளைக் குறித்தும் தெளிவாகத் தெரிந்தவர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக, வனத் துறையினரின் கண்காணிப்பில் செல்ல வேண்டும். வெயில் காலத்தில் மலையேற்றம் செய்யக் கூடாது என்றார்
மாவட்டத்தில் அனுமதியின்றி மலையேற்றத்தில் எந்தக் குழுக்கள் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com