மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே சிறப்பு மலை ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு

மேட்டுப்பாளையம் - குன்னூர் சிறப்பு மலை ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 14) முதல் தொடங்குகிறது.

மேட்டுப்பாளையம் - குன்னூர் சிறப்பு மலை ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 14) முதல் தொடங்குகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சி காரணமாக, இம்மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே வாரத்தில் இரு நாள்கள் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் இரண்டு முதல் வகுப்பு பெட்டிகளும், ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன. 
காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு குன்னூரை வந்தடையும். மறு மார்க்கத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும்.
இதற்கான கட்டணமாக மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல் வகுப்புக்கு பெரியவர்களுக்கு ரூ. 1,100, 5 முதல் 12 வயதுக்கு உள்பட்ட சிறியவர்களுக்கு ரூ. 650, இரண்டாம் வகுப்பு- பெரியவர்களுக்கு ரூ. 800, சிறியவர்களுக்கு ரூ. 500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இச் சிறப்பு ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு 26 முறையுமாகச் சேர்த்து 52 முறை இயக்கப்படுகிறது. இத்தகைய கோடை சிறப்பு ரயில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் இயக்கப்படுகிறது. 
வழக்கமாக இயக்கப்படும் மலை ரயில் சேவையும் தொடர்ந்து இயங்கும். இந்த வழக்கமான மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு பகல் 11.45 மணிக்கு உதகையை வந்தடையும். உதகையிலிருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும். 
வழக்கமான மலை ரயிலில், உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு முதல் வகுப்புக்கு ரூ. 205, இரண்டாம் வகுப்புக்கு ரூ. 30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல, குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு முதல் வகுப்புக்கு ரூ. 185, இரண்டாம் வகுப்புக்கு ரூ. 25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
இந்த ஆண்டில் ஜூன் 4-ஆம் தேதி வரை வழக்கமான உதகை மலை ரயிலில் அனைத்து இருக்கைகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com