ஒக்கி புயல்: மாயமான மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

ஒக்கி புயல் பாதிப்பால் மாயமான மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கினார்.
ஒக்கி புயல்: மாயமான மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

ஒக்கி புயல் பாதிப்பால் மாயமான மீனவர் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
ஒக்கி புயலின் போது தமிழக அரசு எடுத்த முயற்சியின் பயனாக 3 ஆயிரத்து 506 மீனவர்களும், அவர்களது 24 நாட்டுப் படகுகள், 264 மீன்பிடி விசைப் படகுகள் மீட்கப்பட்டன.
177 பேர் மாயம்: தமிழக அரசால் மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட போதிலும், 27 மீனவர்கள் உயிரிழந்தனர். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 177 மீனவர்கள் காணாமல் போயினர்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண உதவித் தொகை முன்பே வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட வருவாய் நிர்வாக ஆணையாளர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை அடிப்படையில், காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 139 மீனவர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த 3 மீனவர்கள், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடலூரைச் சேர்ந்த 19 மீனவர்கள், புதுக்கோட்டையைச் சேர்ந்த 1 மீனவர் என மொத்தம் 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம், மொத்தம் ரூ.35.40 கோடிக்கான காசோலைகளை முதல்வர் புதன்கிழமை வழங்கினார்.
அமைச்சர் டி.ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு..: மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ.10 லட்சமானது வங்கிக் கணக்கில் (அரசு மற்றும் பாதிக்கப்பட்டோரின் பெயர்களில் இணையாக) வரவு வைக்கப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகும் மீனவர்கள் திரும்பி வராவிட்டால் அந்தத் தொகையும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்படும் என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com