கடலூரில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு?: விசாரணைக்கு உத்தரவு

கடலூரில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

கடலூரில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 -ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வு ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வை கடலூர் மாவட்டத்தில் 210 பள்ளிகள் மூலம் 14,534 மாணவர்கள், 16,663 மாணவிகள் என மொத்தம் 31,197 பேர் எழுதி வருகின்றனர். 
தேர்வுப் பணிகளைக் கண்காணிப்பதற்காக இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) எஸ்.உமா நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியரின் மகன் கடலூரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி வருகிறார். அவருக்கு தேர்வு அறையிலுள்ள ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் உதவி செய்து வருவதாக இணை இயக்குநருக்கு பெயரிடப்படாத கடிதம் மூலமாக அண்மையில் புகார் அனுப்பப்பட்டது.
இந்தப் புகாரையடுத்து, தேர்வுக் கண்காணிப்பாளர் எஸ்.உமா விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், திங்கள்கிழமை நடைபெற்ற கணிதத் தேர்வில் அந்த மாணவரின் விடைத் தாளை மட்டும் தனியாக அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார். இதனையடுத்து, அந்த விடைத் தாள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து வரும் தேர்வுகளின் போதும் அந்த மாணவரைக் கண்காணிக்கவும், சில தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதுவோருக்கு உதவும் வகையில் செயல்படுவோரைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com