ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவகுமார் மீண்டும் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில், ஜெயலலிதாவின் மருத்துவரும், சசிகலாவின் உறவினருமான டாக்டர் சிவகுமார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில், ஜெயலலிதாவின் மருத்துவரும், சசிகலாவின் உறவினருமான டாக்டர் சிவகுமார் புதன்கிழமை மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்கள், அவர்கள் வீட்டில் பணியாற்றியவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 
மீண்டும் ஆஜர்: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர் என்ற முறையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவரது உடல்நிலை குறித்து தெரிந்த தகவல்களை அளிக்குமாறு டாக்டர் சிவகுமாருக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் 8 -ஆம் தேதி ஆணையத்தின் முன் ஆஜரான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 9 -ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன், கடந்த 2016 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, டாக்டர் சிவகுமாரும் அங்கு இருந்தார் எனத் தெரிவித்திருத்தார். அதையடுத்து, டாக்டர் சிவகுமார் மீண்டும் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பி இருந்தது. அதன்படி, அவர் புதன்கிழமை மீண்டும் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நலக் குறைபாடுகள், அதற்காக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, டாக்டர் சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது 'மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை, அதற்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள் குறித்து நீதிபதி கேட்டறிந்தார்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com