தஞ்சாவூர்-கோடியக்கரை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: நிதின் கட்கரியிடம் ஓ.எஸ். மணியன் வலியுறுத்தல்

தமிழகத்தில் தஞ்சாவூர் முதல் கோடியக்கரை வரையிலான மாநிலச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்
தில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை புதன்கிழமை சந்தித்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
தில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை புதன்கிழமை சந்தித்த தமிழக அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

தமிழகத்தில் தஞ்சாவூர் முதல் கோடியக்கரை வரையிலான மாநிலச் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் மாநிலக் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக புது தில்லியில் அமைச்சர் நிதின் கட்கரியை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
தமிழகத்தில் தஞ்சாவூர் - மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - கோடியக்கரை வரையிலான 113 கிலோ மீட்டர் தூர மாநிலச் சாலையை (எச்எஸ் 63) தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது. 
இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியையும், நிதி ஒதுக்கீடு செய்யும் பணியையும் நிகழ் ஆண்டிலேயே விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஏற்பாடு செய்வதாக அமைச்சர் தெரிவித்தார். வேதாரண்யத்தில் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுவதால், தஞ்சாவூர் - கோடியக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
சாலை மேம்படுத்தப்பட்டால் நெரிசல் குறையும். மேலும், கோடியக்கரைக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் இடையே மிகக் குறைந்த கடல் தூரம்தான் உள்ளது. 
இதனால், இச்சாலையை மேம்படுத்துவதில் தேசியப் பாதுகாப்பு நலனும் அடங்கியுள்ளது. 
இச்சாலை மேம்பாட்டுப் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம். அவரும் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com