தூய்மை இந்தியா திட்டம்: பல்வேறு மாநில தலைமைச் செயலர்களுடன் மோடி ஆலோசனை

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து பல்வேறு மாநில தலைமைச் செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, விடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆலோசனை நடத்தினார்
தூய்மை இந்தியா திட்டம்: பல்வேறு மாநில தலைமைச் செயலர்களுடன் மோடி ஆலோசனை

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் முறை குறித்து பல்வேறு மாநில தலைமைச் செயலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, விடியோ கான்பரன்ஸிங் முறையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தூய்மைப் பணிகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் முக்கியமானதாகும். பிரதமர் மோடி இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். எனவே, இது தொடர்பாக குறிப்பிட்ட கால இடைவேளையில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதுபோன்ற ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சில சிறப்பு ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அந்த மாநில அரசின் தலைமைச் செயலாளர் பி.பி.வியாஸ் கூறுகையில், 'ஜம்மு-காஷ்மீரில் 55 சதவீத வீடுகளில் இப்போது கழிவறை உள்ளது. இதனை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் 60 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலம் என்ற இலக்கையும் மாநிலம் அடைய வேண்டியுள்ளது.
நாட்டின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கும் ஜம்மு-காஷ்மீரை தூய்மையாகப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, மாநில அரசு சுகாதாரப் பணிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனையின்போது வலியுறுத்தினார். மாநிலத்தில் 4 மாவட்டங்களில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற தகவல் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது' என்றார்.
அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ல் காந்தி ஜெயந்தி கொண்டாடும்போது, இந்தியாவில் திறந்த வெளியை கழிவறையாகப் பயன்படுத்தும் முறை இல்லை என்ற நிலையை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com