நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்வு

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது.
பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்ததால் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பரவலாக செவ்வாய்க்கிழமை இரவும், புதன்கிழமையும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணையில் 109 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,642.34 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 110 கனஅடி, கடனாநதி அணைக்கு 627 கனஅடி, ராமநதி அணைக்கு 62.50 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 187 கனஅடி, குண்டாறு அணைக்கு 14.5 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 28 கனஅடி நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம்: பாபநாசம் அணை - 4 அடி உயர்ந்து 32 அடி, சேர்வலாறு அணை - ஒரே நாளில் 30 அடி உயர்ந்து 49.54 அடி, மணிமுத்தாறு அணை - 83.52 அடி, கடனாநதி அணை - 15 அடி உயர்ந்து 55 அடி, ராமநதி அணை - 10 அடி உயர்ந்து 35 அடி, கருப்பாநதி அணை - 13 அடி உயர்ந்து 38.06 அடி, அடவிநயினார் அணை - 15 அடி உயர்ந்து 25.25 அடி, குண்டாறு அணை - 3 அடி உயர்ந்து 22.50 அடி, நம்பியாறு அணை - 11.97 அடி, கொடுமுடியாறு அணை - 2 அடி.
பாபநாசம் அணையிலிருந்து 20 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 110 கனஅடி, கடனாநதி அணையிலிருந்து 25 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளிலிருந்து தலா 5 கனஅடி, வடக்குப் பச்சையாறு அணையிலிருந்து 22.10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்வரத்து வெகுவாகக் குறைந்து இம்மாவட்டத்திலுள்ள அணைகளில் 8 அணைகள் வறண்டு காணப்பட்ட நிலையில், இப்போது பலத்த மழை பெய்து அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உயரத் தொடங்கியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அணைகளில் 655.6 மி.மீ மழை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, பாபநாசம் கீழ் அணை, கடனாநதி, ராமநதி அணைகளில் அதிகபட்சமாக 655.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி , அடவிநயினார் ஆகிய 6 அணைகளின் நீர் இருப்பு உயர்ந்துள்ளதால் குடிநீர், கால்நடைகளின் தேவைக்கு தடையின்றி தண்ணீர் வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
அருவியில் குளிக்கத் தடை: பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com