பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிய இலவச தொலைபேசி எண் விரைவில் அறிமுகம்: அமைச்சர் க.பாண்டியராஜன்

பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிய இலவச தொலைபேசி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
ஆட்சிமொழி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன். 
ஆட்சிமொழி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன். 

பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிய இலவச தொலைபேசி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், இரண்டு நாள் ஆட்சி மொழிக் கருத்தரங்கம் - பயிலரங்கம், சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக அரங்கில் புதன்கிழமை தொடங்கியது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசியது: 
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 52 சதவீதம் பேர் தமிழர்கள். பொதுவாக அதிகம் பேர் பேசும் மொழி ஆட்சி மொழியாக உள்ளன. அந்த வகையில் கனடா, மியான்மர் உள்பட 8 நாடுகளில் தமிழை ஆட்சிமொழியாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
உலகில் மதிப்புமிக்க மொழிகளை யுனெஸ்கோ வகைப்படுத்தியுள்ளது. அதில் சர்வதேச அளவில் அதிகம் பேசக்கூடிய மொழியாக சீனாவில் உள்ள மாண்டரின் மொழி உள்ளது. இந்த மொழியை 111 கோடி பேர் பேசுகின்றனர். 102 கோடி பேர் பேசும் மொழியான ஆங்கிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் தமிழ் 16 -ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த மூன்றாண்டுகளில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும். பிறமொழிகளில் உள்ள சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை பொதுமக்கள் அறியும் வகையில் அரசின் சார்பில் இலவச தொலைபேசி எண் தமிழக முதல்வரால் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த எண்ணில் எந்த மொழியைச் சேர்ந்த சொல்லாக இருந்தாலும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோன்று தமிழறிஞர்கள், பொதுமக்கள் தாங்கள் கண்டறிந்த கலைச்சொற்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்றார் அவர்.
இந்த கருத்தரங்கில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன், செயலர் இரா.வெங்கடேசன், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள், சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் ஒப்பிலா.மதிவாணன் உள்பட 52 அரசுத் துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com