மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்! 

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை அடைந்திருப்பதாக  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்! 

சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை அடைந்திருப்பதாக  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை கூடியது. இதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது மற்றும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வலியுறுத்துவது தொடர்பாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்மானத்தின் நகலுடன் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நீர்வளத்துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்.

நீங்கள் சென்னை வந்திருந்த பொழுது இது தொடர்பாக நான் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை விரைந்து உருவாக்குவது தொடர்பாக தற்பொழுது  தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்து, ஏற்கனவே நான்கு வாரங்கள் கடந்து விட்டது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் மவுனத்தால் தமிழக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com