சந்திரபாபு நாயுடுவின் மாநில உணர்வு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை: மு.க.ஸ்டாலின்

சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள மாநில உணர்வு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
பெருந்துறையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியை பார்வையிடுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சு.முத்துசா
பெருந்துறையில் நடைபெறவுள்ள மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள திமுக வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியை பார்வையிடுகிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் சு.முத்துசா

சந்திரபாபு நாயுடுவுக்கு உள்ள மாநில உணர்வு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த சரளையில், திமுக மண்டல மாநாடு மார்ச் 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டு மேடையும், 2 லட்சம் பேர் அமரும் வகையில் பந்தலும் அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், மாநாட்டுப் பணிகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள திமுக வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துப் பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியது:
சந்திரபாபு நாயுடு, ஏற்கெனவே பிரதமர் மோடி தந்த எந்த உறுதிமொழியையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்தச் சூழ்நிலையில், பாஜக கூட்டணியில் இருப்பது முறையல்ல என்பதை உணர்ந்த காரணத்தால்தான், அவரது கட்சி சார்பில் பதவி வகித்த மத்திய அமைச்சர்கள் விலகி இருக்கிறார்கள். தவிர, அந்தக் கூட்டணிக்கு இனி ஆதரவு தர மாட்டோம். பாஜகவுக்கு ஆதரவு தருவதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். 
இந்த உணர்வு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வரவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது. காவிரிப் பிரச்னையில், மத்திய அரசு தமிழக விவசாயிகளை, தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இப்போது ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள், சந்திரபாபு நாயுடுவைப் பார்த்தாவது உணர்வார்களா என்பதே எனது கேள்வி. ராமர் பாலத்தை அகற்றாமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதையும் வரவேற்கிறோம். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் திமுகவின் உணர்வு. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று, மக்களின் பாராட்டுக்காகச் சொல்லவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் அதைச் சொன்னேன். 
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு 110-ஆவது விதியைப் பயன்படுத்தி சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இது ஏமாற்று நாடகம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com