மின்னணு குடும்ப அட்டை: ரகசியக் குறியீட்டை சரியாக அச்சிட வேண்டும்

மின்னணு குடும்ப அட்டைகளின் பின்பகுதியில் அச்சிடப்படும் முக்கியமான ரகசியக் குறியீட்டை சரியாக அச்சிட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
மின்னணு குடும்ப அட்டை: ரகசியக் குறியீட்டை சரியாக அச்சிட வேண்டும்

மின்னணு குடும்ப அட்டைகளின் பின்பகுதியில் அச்சிடப்படும் முக்கியமான ரகசியக் குறியீட்டை சரியாக அச்சிட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் இணைய சேவை மையங்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிதாக விண்ணப்பிக்கும் மனுதாரர்களுக்கும் அட்டைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மின்னணு அட்டைகளில் பிழைகள், திருத்தங்கள், மாற்றங்கள் இருந்தால் அவற்றை தனிநபர்களே சரி செய்து கொள்ள முடியும். இதற்காக உணவுத் துறையின் இணையதளத்திலும், செயலியிலும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
இணைய சேவை மையங்கள்: வீட்டில் இணையதள இணைப்பு வசதி இருந்தால் பொது மக்களே உணவுத் துறையின் இணையதள (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்) பக்கத்துக்குச் சென்று தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இதே சேவைகள் தமிழக அரசின் இணைய சேவை மையங்களிலும் அளிக்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள் தாங்களாக திருத்தங்களை மேற்கொள்ளாமல் இணைய சேவை மையங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது. இணைய சேவை மையங்களில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச செயல்பாடுகள் மின்னணு குடும்ப அட்டைகள் சார்ந்தே நடைபெறுகின்றன.
உணவுத் துறை உத்தரவு: இணைய சேவை மையங்களை நாடிச் சென்று மின்னணு குடும்ப அட்டைகளை வாங்கும் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக புகார்கள் எழுகின்றன. குறிப்பாக, அட்டையில் அச்சிடப்படும் விஷயங்கள் தெளிவாக இருப்பதில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இதையடுத்து, இணைய சேவை மையங்களுக்கு உணவுத் துறையானது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:-
மின்னணு குடும்ப அட்டையில், குடும்பத்தினரின் விவரங்கள், அவர்களுக்கு என்னென்ன பொருள்கள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன, இதுவரை எவ்வளவு பொருள்களைப் பெற்றுள்ளனர் என்பன போன்ற விவரங்களை ரகசிய குறியீட்டின் (க்யூஆர் கோட்) வழியாக அறிந்திட முடியும். இது, மின்னணு குடும்ப அட்டையின் பின்புறத்தில் இருக்கும். அட்டையில் உள்ள இந்த ரகசிய குறியீட்டை, நியாய விலைக் கடைகளில் உள்ள இயந்திரத்தில் வைக்கும் போது அனைத்து விதமான தகவல்களும் கிடைக்கப் பெறும். இந்த ரகசியக் குறியீடானது, பச்சை கட்டத்துக்குள் அச்சிடப்பட்டு உணவுத் துறையால் வழங்கப்படுகிறது.
விவரங்கள் தெளிவாகத் தெரிய...அப்படி பச்சை கட்டத்துக்குள் ரகசிய குறியீட்டை அச்சிட்டு வழங்கும்போதுதான் நியாய விலைக் கடைகளில் உள்ள இயந்திரங்கள் அதிலுள்ள விவரங்களை தெளிவாகக் காண்பிக்கும். இணைய சேவை மையங்களில் இத்தகைய ரகசிய குறியீட்டை பச்சை கட்டத்துக்குள் அச்சிடாமல் அதற்கு வெளியே அச்சிட்டு வழங்குகின்றனர். இவ்வாறு குறைபாடு கொண்ட அட்டைகளை நியாய விலைக் கடைகளுக்கு எடுத்துச் சென்றால், அங்குள்ள இயந்திரங்களில் குடும்ப அட்டைதாரர்கள் பெறக் கூடிய பொருள்களின் விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், மேலும் ரூ.30 கட்டணம் செலுத்தி புதிய மற்றும் சரியான மின்னணு அட்டையை இணைய சேவை மையத்தில் பெற வேண்டிய கட்டாயம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்படுகிறது.
எனவே, இது போன்ற சிரமங்களைத் தவிர்க்க மின்னணு குடும்ப அட்டைகளை பிழையின்றி அச்சிட்டு வழங்க வேண்டும் என இணைய சேவை மையங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com