திருநங்கைகளின் அரசுப் பணி கனவுக்கு வண்ணம் கொடுத்த மதுரை ஸ்வப்னா

பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா, மாநில பதிவுத் துறையின் உதவியாளராக இம்மாத இறுதியில் பணியில் சேர உள்ளார்.
திருநங்கைகளின் அரசுப் பணி கனவுக்கு வண்ணம் கொடுத்த மதுரை ஸ்வப்னா


மதுரை: பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா, மாநில பதிவுத் துறையின் உதவியாளராக இம்மாத இறுதியில் பணியில் சேர உள்ளார்.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசிதழ் பதிவுறா அலுவலராக ஒரு திருநங்கை பணியில் சேர்வது இதுவே முதல் முறை என்பதால் அந்த பெருமையையும் ஸ்வப்னா பெறுகிறார்.

இதுமட்டுமல்ல, மாநில  அரசின் 3 உத்தரவுகளுக்கு எதிராக ஸ்வப்னா மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் காரணமாக திருநங்கைகளுக்கு பல்வேறு பலன்களும் கிடைத்துள்ளன.

எக்ஸ்பிரஸ் குழுவிடம் பேசிய 27 வயதாகும் ஸ்வப்னா, தான் ஒரு திருநங்கை என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும், தான் பெண்ணாக மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

அவரே தொடர்கிறார், "எனது அனைத்துப் போராட்டங்களுக்கும் பெற்றோர்தான் மிகப்பெரிய காரணம். எந்த நிபந்தனையும் இல்லாமல் தூய்மையான அன்போடு என்னை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்".

எனது கல்விதான் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது, 2013ம் ஆண்டு திருநங்கை என்ற காரணத்தால் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் போன போது எனது சட்டப் போராட்டம் தொடங்கியது. சென்னையில் போராட்டம் நடத்திய நான், மதுரை கிளையில் இதற்காக வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கில் தன்னலம் கருதாத இரண்டு வழக்குரைஞர்கள் கட்டணம் இல்லாமல் வழக்கில் வாதாடி உதவி செய்தனர்.

பெண்கள் என்ற பிரிவின் கீழ் திருநங்கைகளை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் ஸ்வப்னாவின் சட்டப் போராட்டத்துக்கு பலன் கிடைத்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மற்றும் குரூப் 2ஏ பிரிவிலும் வெற்றி பெற்றார் ஸ்வப்னா.

ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே என் லட்சியம். எனது லட்சியத்தை அடைய நான் கடுமையாக போராடுவேன். டிஎன்பிஎஸ்சியில் செய்தது போலவே இதிலும் சாதிப்பேன் என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com