அரசியலுக்கு வரும்போது ஏன் எம்ஜிஆர் முகம்?: ரஜினியை விளாசிய பிரபல இயக்குநர்! (விடியோ இணைப்பு) 

அரசியலுக்கு வரும்போது ரஜினி முகத்தைக் கழற்றிவிட்டு எம்ஜிஆர் முகத்தை ஏன் போட்டுக்கொள்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல இயக்குநர் கரு.பழனியப்பன்.. 
அரசியலுக்கு வரும்போது ஏன் எம்ஜிஆர் முகம்?: ரஜினியை விளாசிய பிரபல இயக்குநர்! (விடியோ இணைப்பு) 

சென்னை: அரசியலுக்கு வரும்போது ரஜினி முகத்தைக் கழற்றிவிட்டு எம்ஜிஆர் முகத்தை ஏன் போட்டுக்கொள்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல இயக்குநர் கரு.பழனியப்பன் 'கரு நீலம்' என்ற யூடியூப் சேனலில் விரிவாகப் பேசியுள்ளார். ஏறக்குறைய கால் மணி நேரத்தினை தாண்டி ஓடும் இந்த விடியோவில் கரு.பழனியப்பன் ரஜினியின் அரசியல் வருகை குறித்து வரிசையான கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

தற்பொழுது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கரு.பழனியப்பன் பேசியதிலிருந்து சிலபகுதிகள் மட்டும் இங்கே:

என்னைப் போன்ற தீவிர ரஜினி ரசிகர்கள் எல்லாம், ரஜினிகாந்த் எப்போது வெளிப்படையாகப் பேசுவார் எனக் காத்திருந்த வேளையில் எனது அரசாங்கமும் எனது ஆட்சியும் எப்படி இருக்கும் என்பதை வாய் திறந்து கூறினீர்கள்.

இந்த இடத்தில், ரஜினி ரசிகனுக்கும் எம்ஜிஆர் ரசிகனுக்குமான வேறுபாட்டை உண்ர்த்துவது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்.

அரசியலுக்கு வரும்போது ரஜினி முகத்தைக் கழற்றிவிட்டு எம்ஜிஆர் முகத்தை ஏன் போட்டுக்கொள்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் என்கிறீர்கள். ஒரு சிறந்த தலைவன் தனக்கான இடத்தை உருவாக்குவான். ஒரு வெற்றிடத்தை நிரப்பத்தான் வருவேன் என நீங்கள் கூறினீர்கள் என்றால் உங்களுக்குப் பெயர் சப்ஸ்டிட்யூட் ப்ளேயர். அப்படி இருந்தால் ஒரிஜினல் ப்ளேயர் வந்தவுடன் சப்ஸ்டிட்யூட் ப்ளேயரை வெளியே அனுப்பிவிடுவார்கள்.

அருகில் ஏ.சி.சண்முகத்தை அமர வைத்துக்கொண்டு சாதியற்ற அரசியல் என்று நீங்கள் பேசுவதே எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

கட்சியை ஆரம்பிக்கும் முன்னரே கொள்கை என்னவென்று கேட்கிறார்கள் என்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் குளிக்கச் செல்லும் முன்னர்தானே துண்டை எடுத்துச் சென்றீர்கள். குளித்த பின்னர் தானே தேவைப்படும் என்று அப்புறம் வந்தா துண்டை எடுத்தீர்கள். கட்சி ஆரம்பிக்கும் முன்னரே கொள்கை வேண்டும்.

நீங்கள் கூறிய ஆன்மிக அரசியலை இப்போதைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வரவேற்கிறார். யாரைத் தேர் ஏற்ற நீங்கள் தெருவுக்கு வந்திருக்கிறீர்கள்? இதை எங்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

எம்ஜிஆர் போல் நல்லாட்சித் தருவேன் என்கிறீர்கள். எம்ஜிஆர் ஆட்சியின்போது நீங்கள் சினிமாவில் மிகவும் பரபரப்பாக இருந்தீர்கள். அதனால், எம்ஜிஆர் ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்காது.

எம்ஜிஆர், மதுக்கடைகளைத் திறக்க மாட்டேன் என தனது தாய் மீது சத்தியம் பண்ணி ஆட்சிக்கு வந்தவர். ஆனால், டாஸ்மாக் அவர் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்படி என்றால், நீங்கள் எந்த எம்ஜிஆர் ஆட்சியைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை.

இலங்கையில் 84-ல் இனக் கலவரம் வெடித்தபோது தமிழர்கள் மீது எம்ஜிஆர் பரிவான பார்வை வைத்திருந்தார். குறிப்பாக பிரபாகரனை ஆதரித்தார். எம்ஜிஆர் ஆட்சி செய்வேன் என்றால், இலங்கைத் தமிழரிடம் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

எம்ஜிஆர் போல் எளிய மக்களுக்குக் குரல் கொடுப்பேன் எனக் கூறுகிறீர்கள். ஆனால், நீங்களோ ராஜ்குமார் கடத்தப்பட்டபோது குரல் கொடுத்தீர்கள், அமிதாபுக்கு உடல்நிலை சரியில்லாதபோது குரல் கொடுத்தீர்கள். சென்னையில் வெள்ளம் வந்தபோது குரல் கொடுத்தீர்களா? ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வந்தீர்களா?

முதலில் எம்ஜிஆர் பழக்கவழக்கங்களை குணங்களை உங்கள் வீட்டிலும் கல்யாண மண்டபத்திலும் பின்பற்றுங்கள். அதன்பின்னர் அரசியலுக்கு வாருங்கள். அதுவரை நாடு காத்திருக்கும்.

திருமண மண்டபம் கட்ட எம்ஜிஆர் உதவினார் எனக் கூறினீர்கள். 30 ஆண்டுகள் கழித்து அதை ஏன் இப்போது கூறினீர்கள் எனத் தெரியவில்லை. கோர்ட்டுக்குப் போக வேண்டிய நீங்கள் ஏன் கோட்டைக்குப் போனீர்கள்?

எம்ஜிஆர், ஜெ., கருணாநிதி மிகச் சிறந்தவர்கள் என்கிறீர்கள். அவர்கள் ஆட்சிதான் 50 ஆண்டுகளாக நடந்திருக்கிறது அப்படியென்றால் சிஸ்டம் எப்படி கெட்டது?

மாணவர்கள் ஆங்கிலம் படியுங்கள் என்கிறீர்கள். தமிழர்கள் முன்னேறினால் தமிழ் முன்னேறும் என்று நீங்கள் கூறியது அரிய கருத்து. நீங்கள் முன்னேறினீர்களே, கன்னடம் உங்களால் முன்னேறியதா? ஓர் இனக்குழு முன்னேறுவதால் மொழி முன்னேறாது..

அரசியல் என்பது பால பெரியவா, பெரியவா, மகா பெரியவா என்பதற்கான இடமல்ல. அரசியலில் மக்கள்தான் 'பெரியவா' என்பதைத் புரிந்துகொண்டு அரசியலுங்கு வாங்க.

இவ்வாறு கரு.பழனியப்பன் பல்வேறு காட்டமான கேள்விகளை அந்த விடியோவில் முன்வைத்துள்ளார்:

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com